கீதை அறிக நீ - அத்தியாயம் 9
-----
asraddadhanah purusha
dharmasyasya parantapa
aprapya mam nivartante
mrityu-samsara-vartmani
பக்தியீன் யோகப் பலனதை நம்பாதார்
முக்தி அடையார் முழுவாழ்வில் - மிக்குபல
சென்மங்கள் கொண்டுமவர் தேரார் அறிகநீ
நன்னம்பிக் கையீன் நலம் (9:3)
-----
na ca mat-sthani bhutani
pasya me yogam aishvaram
bhuta-bhrn na ca bhuta-stho
mamatma bhuta-bhavanah
ஆக்கிய யாவும் அடங்கிடா தெம்மகத்துள்;
காக்குந் துணையாய்க் கலந்துறைந்தும் - சூக்கும
மாற்றத் தொடர்வினையால் மாறோ மறிகநீ
தோற்றத்தின் மூலத் துளி (9:5)
-----
sarva-bhutani kaunteya
prakritim yanti mamikam
kalpa-ksaye punas tani
kalpadau visrjamy aham
வாழ்வைத் தொலைக்கும் வடிவங்கள், அந்திவரும்
ஊழ்பாடில் எம்முள் ஒடுங்கும்எம் தாழ்விலா
ஆற்றலால் மீண்டுமுரு வாகும் அறிகநீ
தோற்றமழி(வு) என்றோர் தொடர் (9:7)
-----
prakritim svam avastabhya
visrijami punah punah
bhuta-gramam imam krtsnam
avasam prakriter vasat
எட்டாப் பரவெளியும் எம்முன் பணிந்திருக்கும்;
தட்டாதெம் ஏவலாற் றன்னுருவை - விட்டதுவாய்
வேறோர் உருவேற்கும் விந்தை அறிகநீ
ஈறாந்தம் கேடே இயல்பு (9:8)
-----
mayadhyaksena prakritih
suyate sa-caracaram
hetunanena kaunteya
jagad viparivartate
எம்ஆற் றலிலொன்றாய் இவ்வியற்கை எம்குறிப்பை
தம்முடைய தாக்கித் தனித்தியங்கி - அம்பரஞ்சூழ்
அண்டப் பொருளெல்லாம் ஆக்கும் அறிகநீ
உண்டாதி யந்தம் உயிர்க்கு (9:10)
-----
avajananti mam mudha
manusim tanum asritam
param bhavam ajananto
mama bhuta-maheshvaram
ஊனமதி கொண்டோர் உணர்ந்திலர் ஓங்குமெம்
மானுட ரூபத்தின் மாட்சியை - ஞானமிலார்
கல்லார் பரத்தின் கருவை; அறிகநீ
எல்லா உருவும் எமது (9:11)
-----
moghasa mogha-karmano
mogha-jnana vicetasah
rakshasim asurim caiva
prakritim mohinim sritah
ஆசைகொண் டவ்வழியே ஆடும் மனத்தொடு
நீசநெறி சேர்நெஞ்ச நிர்மூடர் - நாசகுணம்
காத்துத்தன் காலங் கழிப்பர் அறிகநீ
சாத்தன் குணமதின் சார்பு (9:12)
-----
mahatmanas tu mam partha
daivim prakritim asritah
bhajanty ananya-manaso
jnatva bhutadim avyayam
உண்மயங்கா நல்லோர்க் குதவும் பரசக்தி;
எண்ணுழலா தேத்தும் இயல்புடையார் கொண்டெம்மை
கால முதல்வனாய்க் காண்பர் அறிகநீ
மூல முடிவிலியே யாம் (9:13)
உண்மயங்கா = உள் + மயங்கா
-----
pitaham asya jagato
mata dhata pitamahah
vedyam pavitram omkara
rk sama yajur eva ca
அண்டத்தின் தந்தைதாய் ஆதார முந்தையன்யாம்
எண்ணத் தெழுமறிவோ டெண்துலக்கும் உண்மையும்
ஓங்கார அட்சரமும் யாமென் றறிகநீ
ஈங்கார்முவ் வேதமும் யாம் (9:17)
-----
gatir bharta prabhuh saksi
nivasah saranam suhrt
prabhavah pralayah sthanam
nidhanam bijam avyayam
இலக்காய் இயக்கமாய் இல்இறையாய் நட்பாய்
கலக்கத் தடைக்கலமாய் காப்பாய் - உலகத்தே
ஆக்கமழி வாயனைத்தும் யாமென் றறிகநீ
காக்கும்யாம் ஈறிலாக் காழ் (9:18)
காழ் - விதை
-----
tapamy aham aham varsam
nigrhnamy utsrijami ca
amritam caiva mrityus ca
sad asac caham arjuna
அழற்றரும் வெப்பம்யாம்; ஆக்கியும டைத்தும்
பொழிமழையை ஆளும் பொறியாம் - அழிவிலியாம்
சாவெனும் தோற்றமெமைச் சாரும் அறிகநீ
ஆவியுடல் அவ்விரண்டும் யாம் (9:19)
-----
te tam bhuktva svarga-lokam visalam
ksine punye martya-lokam vishanti
evam trayi-dharmam anuprapanna
gatagatam kama-kama labhante
புண்ணியத்தால் சொர்கத்தின் போகத் துழன்றுபின்
மண்ணுலகை மீண்டுமவர் வந்தடைவர் - எண்ணஇன்பை
வேத வழியால் விழைவோர்க் கறிகநீ
சாதல் பிறத்தல் சுழல் (9:21)
-----
ananyas cintayanto mam
ye janah paryupasate
tesham nityabhiyuktanam
yoga-ksemam vahamy aham
என்றுமெமை பக்தியோ டெச்சுவார், எம்வடிவோ
டொன்றுமுயர் யோகத் தொழுகுவார் - அன்பரவர்
கொள்ளாப் பொருள்யாம் கொடுப்போம் அறிகநீ,
உள்ளதையும் காப்போம் உணர் (9:22)
-----
aham hi sarva-yajnanam
bhokta ca prabhur eva ca
na tu mam abhijananti
tattvenatas cyavanti te
உன்னத வேள்விகளை உய்த்துக் களிப்போன்யான்;
அன்னெறியை ஆளும் அதிபதியான் - உன்னறிவால்
என்றன் பரநிலையை எண்ணி யறிகநீ
அன்றெனின் வீழ்வே அறுதி (9:24)
அறுதி = முடிவு
-----
yat karosi yad asnasi
yaj juhosi dadasi yat
yat tapasyasi kaunteya
tat kurusva mad-arpanam
முன்னுமுன் செய்கை, முறையாய்நீ உண்ணுகின்ற
அன்னம், உவந்தீயும் அன்பளிப்பென்(று) - இன்னபல
உய்பணிகள் யாவும் எமக்கே அறிகநீ
செய்கடனாய் நீயவற்றைச் செய் (9:27)
-----
subhasubha-phalair evam
moksyase karma-bandhanaih
sannyasa-yoga-yuktatma
vimukto mam upaisyasi
செய்கடனாய் உன்பணியைச் செய்கையின்னன்(று) அன்றெனும்
பொய்ம்மாயைத் தோற்றங்கள் போய்த்தீரும் - மெய்யறிவோ(டு)
எந்நினைவாய் நீயிருப்பின் ஏற்றம் அறிகநீ
பந்தமறும் பின்காண் பரம் (9:28)
-----
samo ’ham sarva-bhutesu
na me dvesyo ’sti na priyah
ye bhajanti tu mam bhaktya
mayi te tesu capy aham
வேண்டியவர் வேண்டாதார் வேற்றுமை யேதெமக்கு;
காண்பவரை யாம்சமமாய்க் காண்கின்றோம் - வேண்டியெமை
அண்டும் இயல்புடையார் அன்பர் அறிகநீ
நண்பரவ் வன்பர்க்கி யாம் (9:29)
-----
man-mana bhava mad-bhakto
mad-yaji mam namaskuru
mam evaishyasi yuktvaivam
atmanam mat-parayanah
எண்ணத்தில் நீநிறை எம்நினைவை; எக்காலும்
தொண்டனாய் எம்மைத் தொழுதிரு - உண்ணெஞ்சால்
எச்சிடின் சேர்வாய் எமையென் றறிகநீ
நிச்சயம் என்றாள் நினை (9:34)
-----
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 |
