நீ, நான், தீபாவளி
'தொடத் தொடரும் தீ'
என்னும் விதி சரியோ?
நம் இருவரிடையே தொடர்ந்த
அந்த மத்தாப்புச்சிரிப்புகள்
தந்த மந்தகாசம்
என் நெஞ்சில் இன்னும் நீறு பூத்திருக்கிறது.
ஓ! அது ஒரு காலம் -
நம் வண்ணச் சிரிப்பின் ஒளியழிக்கப்
பம்மிப் புகைந்தது உலகம்.
என் நெஞ்சுக்குள்
ஒரு 'ஆயிரம் வாலா' வைக்
உன் கண்களால் கொளுத்திப்போட்ட
சாகசக்காரி நீ!
இதோ என் கையில்,
சிதறிய அந்த காகிதத் துகள்கள் -
உன் கடிதங்களாய்.
நெஞ்சம் நம் கையளவு என்ற கூற்று பொய் என்பேன் -
இதோ நீ செலுத்திய அந்த ராக்கெட்டு,
இன்னும் செல்கிறது என் நெஞ்ச வானில் -
நிற்கத் தெரியாது.
ரசாயனம் என்பது இதுதானோ?
வளர்ந்த பாம்பாய் உன் நினைவு
என் மூச்சை அடைக்கிறது -
கொளுத்திய நீ
காணாமல் போனதும்.
கண்ணைக்கரிக்கும் அந்தப் புகை -
என்னை, எனக்கே அடையாளம் தெரியாதபடி.
முகத்தில் கரியைப் பூசுவது என்பது இதுதானா?
சென்ற தீபாவளியில் நீ கொடுத்த
சில எரிதொட்டிகள்
நமுத்துப்போய்க் கிடக்கின்றன -
நம் காதலைப் போல.
அவை கிடக்கட்டும்,
உனக்கு என் தீபாவளி வாழ்த்துகள்.
- நீ, நான், தீபாவளி
- நீ, நான், நிலவு
- நீ, நான், மௌனம்
