குறுமடல் ஐம்பது (1-10)
-
பிரிய சகியே,
நம் காதலின் வேருக்கு நீரை விட்டபடி,
கிளைகளை மட்டும் ஏன் அடிக்கடி வெட்டிக் களைகிறாய் நீ?
- வளர்ந்திருக்கும்(?) போன்சாய் மர நிழலில் நான்.(01) -
பிரிய சகியே,
என் மீது தான் உனக்கு எத்தனை நம்பிக்கை?
பூசணிக்கொடியாய் படர்ந்துள்ளாய் என் நெஞ்சில்.
- பூசணிக்காயான உன் நினைவுகளுடன் நான். (02) -
பிரிய சகியே,
என் கனவுகளில் நீ வந்தாயா என்கிறாய்.
எனக்கு தெரியவில்லை.
- நின் கனவுக் காதலன் (03) -
பிரிய சகியே,
பிரிவு தான்
'நாம்' மூவர் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
- பிரிந்திருக்கும் 'நான்' (04) -
பிரிய சகியே,
என் வானில் நீ
என்றுமே முழு நிலவு தான்.
- உன்னைச் சுற்றும் உலகம். (05) -
பிரிய சகியே,
எழுதும் கவிதைகள் யாவும் உன்னைப் பற்றியதுதானா என்கிறாய்.
நீ எழுதிய கவிதைகள் உனக்கே நினைவில்லையா?
- உன் எழுதுகோல் (06) -
பிரிய சகியே,
அழகொளிரும் உன் கண்களுக்கு மை தேவையா என்றேன்.
தீட்டவில்லை, கருமை என்பது என்னவென்று மைக்கு காட்டுகிறேன் என்றாய்.
- உன்னைத் தீட்டும் ஓவியன். (07) -
பிரிய சகியே,
உன் சொல்வீதியில் எழுத்துக்கு எழுத்து,
நின்றுச் சுகங்காண எண்ணிலா நிறுத்தங்கள்.
- கவிதைப்பயணி (08) -
பிரிய சகியே,
என் கவிதை ஒலிப்பது நின்று விட்டது என்கிறாய்.
நின்று விட இது என்ன வெறும் மூச்சுக்காற்றா?
- மார்கண்டேயக் கவிஞன் (09) -
பிரிய சகியே,
என் கவிதைகளுக்கு
கருவாகிறாய் நீ.
- பிரசவிக்கத்துடிக்கும் மகிழ்ச்சியில் நான். (10)
| 01-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 |
