அதுவும் இதுவும் - சிலேடைகள் (01-10)
-
கண் - மைப்பேனா (1)
வெள்ளைக் கருப்பாய் விளையாடும்; மையேற்க,
கள்ளுண்ட போதைக் களியாட்டம் - உள்ளுறங்கும்
எண்ணங்கள் ஊற்றாகும்; வற்றச்சொல் வாரா;கூர்
கண்ணொத்த மைப்பேனா காண் -
கைக்கடிகாரம் - குதிரை (2)
ஓடிக்கொண் டேயிருக்கும், ஓடுங்கால் தானொலிக்கும்,
நாடுங்கால் பின்னகரும், நையவிசை கூடும்,
கனையக்கை வைதணியும், காருலோ கத்தோற்
பிணைகடிகை யும்பரியும் நேர்கனைதல் - To sound, as a drum; ஒலித்தல்
நைய - வருத்த / வளைக்க
கனைத்தல் - குதிரையின் ஒலி
கார் - கருமை -
தொலைபேசி - நாய்க்குட்டி (3)
படுத்தால் சிணுங்கும், பலவா றொலிக்கும்,
எடுத்தால் அமைதியுமே னென்றுப் - பிடித்தால்
தலைசாயப் பேசும், சதாவிழிக்கும், வால்சேர்
தொலைபேசி நாய்க்குட்டி நேர் -
செய்தித்தாள் - நடிகை (4)
வண்ணமுகப் பால்நல் விலைதேறும், வந்தநாள்
கண்மொய்க்கும், அன்பர்தம் கூட்டம்காண் - முன்னாள்
படிமறையச் சின்னதாய் பாத்திரமாம், செல்லா
நடிகையும் நாளேடும் நேர் -
மான் - மயில் (5)
கண்ணார் கருமேனி, கானகத்தே ஈதழகு,
விண்ணார் அழகனமை ஊர்தியுமாம் - பெண்காண்
கவிகட்கோ பின்னுவமை, காற்றாடுந் தோகை,
கவரியுமாய் மான்மயிலைக் காண்அழகனமை - அழகன் அமை(யும்) / அழகன் அ(ம்)மை
தோகை - மயிற்பீலி / விலங்கின் வால்
கவரி - கவரி மான் / சாமரம் -
பல் - தேங்காய் (6)
பார்வைக்கு வெந்நிறம்; பாலென்றும் பேர்பெறும்;
நார்துலக்கும்; வீழ்ந்துடைய நேரும்;வாய் நீர்கசியும்;
பாங்காய் அரைத்துண்ணப் பண்டச் சுவையூறத்
தேங்காயும் பல்லுங்காண் நேர் -
திருமணம் - மாலை (7)
இணையப் பிறக்கு மெதிரெதிராய்த் தொடக்கம்;
பிணையுமோர் நாணால்; பெறுந்தோள் - அணையுமன்பு
வற்றமணம் வாடும்; விரலா லிணைந்தொன்றில்
மற்றொன்றாய் மாலைமணம் காண் -
கணினி - விளக்குமாறு (8)
எல்லாம் விளக்குமெலி ஊருமிடம் போய்வரும்;
செல்லவோர் ஊர்தியாம் சூனியத்தே - சொல்லின்
பணிந்தீரா லேபெருக்கும்; பின்கழிவைக் கூட்டும்;
கணினிக்கு நேர்விளக்கு மாறுசொற்பிரித்து:-
எல்லாம் விளக்கும்; எலி ஊரும் இடம் போய்வரும்;
செல்லவோர் ஊர்தியாம் சூனியத்தே - சொல்லின்
பணிந்து ஈராலே பெருக்கும்; பின்கழிவைக் கூட்டும்;
கணினிக்கு நேர்விளக்கு மாறு -
முடைபாய் - கடன் (9)
இடைவிடா தோர்இறுக்கம்; ஈந்திலையே என்பர்;
முடைநேரம் கைமாறும்; மூழ்த்த அடையும்;
படுக்கும் பணிக்காம்; படுத்தால் உறுத்துங்
கடனாய் முடைபாயைக் காண்ஈந்து - ஈதல் / ஈச்சம்
முடை - பணமுடை / பாய் முடைதல் (பின்னுதல்)
மூழ்த்து - மூழ்கச்செய்தல் / மூடு
படுத்தல் - துயிலுதல் / வியாபாரம் படுத்தல் -
நாய் - பட்டம் (10)
வாலிருக்கும், வானமையும், உச்சமே லேறுங்காண்,
பாலருக்கோர் ஆடுபொருள், பின்நாண்வில் போலிருக்கும்,
சார்ந்திருக்கும் கையிழுக்கச் சற்றசையும்; நாரறச்
சோர்ந்தலையும் பட்டம்நாய் நேர்வான் - அழகு / ஆகாயம்
உச்ச - உச்சுக்கொட்டுதல்
ஏல் - மிக
நாண் - முதுகுத்தண்டு / தண்டு (மூங்கிற்பட்டை)
| 01-10 | 11-20 | 21-30 | 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 |
