skip to content

தம்பியருள் சிறந்தவன் குகனே...

தம்பியருள் சிறந்தவன் குகனே...

குக படலத்தில் கம்பன் நிலை நிலையாக குகனின் சிறப்பை உயர்த்திச் செல்லும் பொருள் குறித்து எழுந்த கவிதை இது. 15/8/2010 அன்று பாரதி கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.

  • கம்பனின் கரந்தந்த கவியதில் வருமந்த
    தம்பியர் பலருள்ளர்; தரமதில் இவருள்ளும்
    செம்மையர் எவரென்றத் தெளிவறு புதிரொன்றே
    எம்மனத் தகமோடும் எழுநிலை குகனோடே (1)
    (எழுநிலை = ஏழு நிலைகள்)
  • ஓடிடும் நதிகங்கை உலவிடும் திரைபொங்கும்,
    காடுறை நகரத்தார் கடந்திடும் அகலத்தில்
    நாடிடும் இடங்காட்டி நலஞ்செயும் படகோட்டி
    வேடவன் குகனென்பான் விரைநதித் துறைமன்னன் (2)
  • (நிலை 1. நாவாய் வேட்டுவன், நாய் அடியேன் - 10)
    தாயினள் பிரியென்றாள் தயரதன் சரியென்றான்
    போயின முடிசெங்கோல் பொலிவிலை இனியெங்கும்
    வாயிலில் அவன்தம்பி வழிவிட குகன்தன்னை
    நாயினன் எனச்சொல்வான் நடந்திடும் வழிவெல்வான் (3)
  • (நிலை 2. உள்ளம் தூயவன், தாயின் நல்லான் - 11)
    போயினன் இளவற்றன் பெருமனின் செவியொற்றித்
    தூயவன் குகனென்பான் தெளிவினன் அகவன்பால்
    தாயினும் மிகுநல்லன் தமையனுக் கிதுசொல்ல
    நாயினன் நிலையற்று நரனெனும் நிலையுற்றான் (4)
  • (நிலை 3. செய்குவன் அடிமை - 16)
    அன்புடன் சுவைமீனும் அமுதென அமைதேனும்
    முன்பிடும் அதையுண்ண முறையிடும் நமதன்பன்
    இன்னலின் இடியாள இணங்கிடும் அடியாளாய்
    இன்னோரு படியேற்றி இயம்பிடும் நடைசாற்றும் (5)
  • (நிலை 4. யாதினும் இனிய நண்பா - 17)
    பாதையில் நதியோடைப் பயணமே அதிகாலைப்
    போதினில் ஒருநாவாய் பொருத்திடக் கரைசேர்வாய்
    காதலில் பதமண்டிக் கதறிடும் விதம்கண்டி
    யாதினும் இனியன்தான் இவனென கவிசொல்வான் (6)
  • (நிலை 5. இளவல் உன் இளையான் - 40)
    கங்கையை மறுநாளே கடந்தவர் பிரிவேளை
    தங்குவன் எனக்கெஞ்சும் சலமகன் தனைநெஞ்சில்
    பொங்கிடும் மகிழ்வாலே பெருமனும் புகழ்வானாம்
    அங்குள இளையானை அடியனின் இளையானாய் (7)
  • (நிலை 6. அன்புள இனி நாமோர் ஐவர்கள் உளர் ஆனோம் - 41)
    ஐயனின் பதமொன்றி அருகமர் பணியொன்றை
    மெய்யினன் மிகுநல்லான் விரும்பிட பெருவில்லார்
    கையினன் பகற்கின்றான் கடமையில் அகம்வென்றாய்
    ஐவரே இனிநாமோர் அகமுளர் எனவாவோம் (8)
  • (நிலை 7. உன் கிளை எனது அன்றோ; என் கிளை இது கா நீ - 43)
    கண்ணெனத் தினங்காக்கக் கருதிய குகன்நோக்கை
    அண்ணலும் மறுக்கின்றான் அவனதைத் துறக்குங்கால்
    மண்ணதை எவர்காப்பர் வனக்கிளை இவனேற்றே
    உண்மனக் களைப்பின்றி உதவிடென் கிளைக்கென்றான் (9)
    (உண்மனம்=உள்+மனம்)
  • காவியம் இயல்கின்ற கடமையில் பயன்தன்னை
    மேவிய இளையோரே மிகப்பலர்; சளையாமல்
    ஏவிடும் பணிதன்னில் இயன்றவன், பணிந்தண்ணல்
    சேவையே பெரிதென்றோன் சிறப்புகள் அரிதன்றோ (10)
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.