மனம்போன போக்கில்...
இறை வணக்கம்
முந்தையா சக்தீ முகுந்தா கலைவாணி
கந்தையா பூமா கணபதியே - எந்தையே
ஆன்ற பொருளாய் அனைத்துருவும் சேர்பரமாய்
தோன்றிடும் நீயே துணை
(முந்தையன் = சிவன்)
தலைவர் வாழ்த்து
தேடித் தரமார்ந்த தேந்தமிழ்ப் பாட்டியற்றி
பாடுங் குயிலாயும் பாவிசைத்துக் - கூடதில்
தேனை அனந்தரவர் சேர்க்கின்றார்; பாருசிக்க
ஆனவே வண்டாய் அவை
அவையடக்கம்
நெஞ்சின் நரம்புகளில் நீளும் நினைவெடுத்துக்
கொஞ்சம் கவிதை கொடுக்கின்றேன் - விஞ்சுமதி
கொண்டோர் விளங்குமிக் கேளரங்கில் நுண்செவியை
அண்டுமோ என்றன் அலப்பு
மனம்போன போக்கில்
மனமொன் றிலக்கிலா மார்க்கத் தோடிக்
கனவெனும் ஊரினுட் காணாது போகும்;
போகையிற் சூரியன் பொன்னாய்த் தோய்ந்தப்
பாகினை விண்ணெலாம் பரப்பிச் செல்லும்;
செல்லும் நொடிநம் சீவன் சேர்த்த
வல்லுடல் அழகை வழித்துப் பார்க்கும்;
பார்க்கும் கண்வழிப் பயன்தான் என்ன?
சேர்க்கும் நனவுகள் தேய்க்கும் நம்மை;
நம்முளம் நம்வழி நடக்காப் போதில்
ஐம்புலன் இருந்தென், அகச்சொற் கேளா; (10)
கேளாச் சென்றனள் கோதை என்சொல்
ஆளாய் நின்றேன் அதனால் இங்கே;
இங்கென அங்கென எங்கும் இறைவன்
தங்குவன், அவன்றன் தாளடி போற்றி;
போற்றினர், புகழே புரையாய்க் கண்ணின்
ஆற்றலைக் குறைக்க அந்தன் ஆனேன்;
ஆனது யாவுமென் அறிவால் ஆமோ?
போனதை எண்ணிப் பொய்க்கணீர் தேவையோ?
தேவை அமைதி; தெளிவிலை, தீர்விலை,
சாவையே பார்த்திடும் சரித்திரம் தீவினில்; (20)
தீவெது? கண்டம் சேரா வண்ணம்
பூவினில் துறவு பூண்டிடும் மண்வெளி;
வெளியெலாம் ஒருதுளி வெடிப்பில் என்பார்
தெளியார் அந்தத் துளியின் கருவை;
கருமை என்பது கலக்கா நிறங்கள்,
தருமே வெள்ளை தங்களுட் கலந்தே;
கலந்தென் கனவைக் கண்ணெனும் தூரிகை
உலர்ந்த மனதில் ஓவியம் வரையும்;
வரைதனில் ஓடிடும் வான்தவழ் மேகத்
திரைபட மரமெலாம் சிலிர்த்து நிற்கும் (30)
நிற்கும் தஞ்சை நிழலைக் கூட
இற்றை உலகம் எட்டா தறிக;
அறிவால் யாவும் ஆகு மாயினும்
இறையை அறிய இருப்ப தன்பே;
அன்பே நம்மை ஆக்கும் ஆற்றல்,
என்பும் சதையும் எழுவிசை மாற்றம்;
மாற்றம் என்றும் மாறா துலகில்
ஏற்றம் என்ப தெண்ணத் தளவே;
அளவைத் தாண்டி அடைத்து நின்றான்
உளத்தில் அவனை உணர்ந்தால் உயர்வு (40)
(தஞ்சை = தஞ்சைக் கோயில்)
உயரே கழுகோ உலகை நோக்கும்,
பயிரின் தோகை பார்க்கும் வானை;
வானம் மனித மனத்தின் வண்ணம்
ஆனது கோடி ஆவதுங் கோடி;
கோடி யென்பது கொள்ளப் பெரிதோ,
ஆடச் செய்யும் அதுவோர் விளிம்போ?
விளிம்பாய் மையம் விரியும் வேளை
வெளியென் றதனை விளக்கும் கணிதம்;
கணிதம் என்பதும் கற்பனை என்பேன்,
இனிவரும் நிகழ்வை இயம்புவ தாலே (50)
ஆலா விதையா ஆழ்ந்து நோக்கின்
ஆலே விதையுள் அடங்கி உறையும்;
உறையும் இயல்பும் உருகும் செயலும்
இறையின் தன்மை எனக்காண் உண்மை;
உண்மை என்றும் ஒருநிலை அன்று,
கண்வழிப் பார்வை காட்டும் உருவே;
உருவென் றெதையும் உணர்வே அறியும்
கருங்கல் உள்ஆர் கற்பனைச் சிலைபோல்;
போலி மெய்யைப் போர்த்து மறைக்கும்,
பாலில் நீராய்ப் பரவி நிறையும் (60)
நிறைந்த மனதில் நிற்கும் இன்பம்,
குறைந்த நேரம்; கூடும் பாரம்;
பாரம் என்பது பார்வைத் தவறே,
தீரும், நெஞ்சதைத் தீண்டா நொடியே;
நொடியென் றோன்றே நிகழ்வில் இல்லை,
கடந்ததும் வருவதும் கலக்கும் கோடே;
கோடாய்த் தோன்றும் குணமெனும் கயிற்றில்
ஆடும் நெஞ்சம் அகடு பகடாய்;
பகடை உருட்ட பழமா? வெட்டா?
வெகுவாய்ப் பதறும், உருட்டும் மனமே (70)
குறிப்பு: நனவோடை அமைப்பில் (surrealism) அமைந்த ஆசிரியப்பா வகை பாடல் இது.
