skip to content

நிழலின் நிஜங்கள்...

நிழலின் நிஜங்கள்...

ஓவியனே தூரிகையாய் உருவில் மாறி
.. ஓய்வின்றி வரைகின்றான் நிழலை மண்ணில்;
ஆவியென ஊனுடலை அணைத்துக் கொண்டே
.. அந்திவரை நிழல்நிஜத்தை அடுத்துச் செல்லும்;
சாவியிலா எந்திரனோ? தன்செல் க்ளோனோ?
.. தன்நிஜத்தின், அகமுகத்தின் தன்மை தானோ?
ஏவியெவர் விட்டவினை? என்றும் பின்னே
.. இடைவிடாது செல்கின்ற இருட்டுச் சாத்தான் (1)

ஆடியென நிலப்பரப்பை ஆக்கித் தானே
.. அடிக்கீழே அடியொன்றை அளந்து வைக்கும்,
சோடியென நிஜத்தோடு திரிந்த போதும்
.. சுடுவெய்யில் படும்வேளை தேய்ந்து போன
பேடியென உருச்சுருங்கி புதைந்து நின்றும்
.. பிற்பகலும் முற்பகலும் பெரிதாய் நீளும்;
ஓடிடுமே இரவினிலே ஒளியைக் கண்டால்
.. ஒளிந்துகொளும், நிஜமறைவில் ஒடுங்கி நிற்கும் (2)

காலுடைய மனச்சாட்சி கண்டோம் இங்கே,
.. கருநிழலே; அதுநமக்குக் காட்டும் நம்மை;
காலணியாய் நம்கால்கள் கடந்து வந்த
.. காலமெலாம் அதுவாழும்; காவல் நிற்கும்;
காலனவன் உயிர்பறிக்கக் காற்றுப் போயும்
.. கடமையிலே தவறாது காயம் காக்கும்;
காலத்தால் அழியாத கருப்புச் சாமி
.. கண்கண்ட கடவுளிது, கண்ணே சாட்சி (3)

குறிப்பு: 'ரசனை' செப்டெம்பர் 2010 இதழில் வெளியானது.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.