கீதை அறிகநீ - அத்தியாயம் 12
-----
sri-bhagavan uvaca
mayy avesya mano ye mam
nitya-yukta upasate
shraddhaya parayopetas
te me yuktatama matah
எம்முருவை எண்ணத்துள் ஏற்றென்றும் எந்நினைவாய்
எம்மைத் தொழுவார் எமக்கன்பர் - நம்பியெமை
போற்றும் சிறந்த புனிதர் அறிகநீ
ஏற்றமுடை யோகி இவர் (12:2)
-----
ye tv aksharam anirdesyam
avyaktam paryupasate
sarvatra-gam acintyam ca
kuta-stham acalam dhruvam
புலனறியாப் பேரின்பாய்ப் பூநிறைத்(து)எண் காணாச்
சலனமிலி மாறாச் சடமாய் - பலவழியில்
உண்மையாய் எம்மை உணர்வோர் அறிகநீ
அண்டுவர் எந்தாள் அவர் (12:3)
-----
sanniyamyendriya-gramam
sarvatra sama-buddhayah
te prapnuvanti mam eva
sarva-bhuta-hite ratah
ஐம்புலன டக்கி அனைவர்க்கும் ஓர்நிலையில்
தம்மா லியன்றபணி தாம்செய்து - செம்முறையில்
சேர்ந்தோர் வளம்பெருகச் செய்வோர் அறிகநீ
சேர்வரெமை தொண்டாற் சிறந்து (12:4)
-----
mayy eva mana adhatsva
mayi buddhim nivesaya
nivasisyasi mayy eva
ata urdhvam na samsayah
பத்தியால் ஆற்றுப் படுத்துன் அகத்தையெம்பால்
புத்தியால் போற்றிப் புகழெமை - இத்திறத்தால்
எம்முளத்த மைவாயென் றென்றும் அறிகநீ
இம்மியும் ஐயம் இலை (12:8)
-----
advesta sarva-bhutanam
maitrah karuna eva ca
nirmamo nirahankarah
sama-duhkha-sukhah ksami
அழுக்கா றறியான் அனைத்துயிர்க்கும் நண்பன்
எழுமகந்தை ஏதும் இலாதான் - கழிதுன்பும்
இன்பும் இணைநிலையில் ஏற்பான் அறிகநீ
அன்பன் எமக்கே அவன் (12:13)
-----
santustah satatam yogi
yatatma drdha-niscayah
mayy arpita-mano-buddhir
yo mad-bhaktah sa me priyah
உள்ள நிறைவோ டுணர்வடக்கி ஏத்துதலைக்
கொள்வான் அவன்வாழ்வின் குறியென்றே - தெள்ளறிவோ(டு)
என்பால் மனத்தா லியைவான் அறிகநீ
அன்பன் எமக்கே அவன் (12:14)
-----
yasman nodvijate loko
lokan nodvijate ca yah
harsamarsa-bhayodvegair
mukto yah sa ca me priyah
எவன்பொருட்டாய் யார்க்கும் இழப்பிலையோ, யாங்கும்
துவளாத நெஞ்சத் துணிவோ(டு) - அவதியச்சம்
இன்பமிவை யாவுமொன் றென்போன் அறிகநீ
அன்பன் எமக்கே அவன் (12:15)
-----
samah satrau ca mitre ca
tatha manapamanayoh
sitosna-sukha-duhkhesu
samah sanga-vivarjitah
நட்புபகை யென்றாய் நலங்கேடு பார்க்காமல்
உட்புறத்தார் உள்ளலெள்ளல், ஏற்றமவம் - தட்பவெப்பம்
இன்பதுன்பம், ஏதுமொன்றாய் ஏற்போர் அறிகநீ
அன்பர் எனக்கே அவர் (12:18)
அவம் - பயனின்மை/கேடு
-----
tulya-ninda-stutir mauni
santusto yena kenacit
aniketah sthira-matir
bhaktiman me priyo narah
எப்போதும் மௌனியாய் என்றும் நிறைவோடு
தப்பாதோர் எண்ணத் தரமதியர் - அப்பக்தர்
என்னை வணங்கும் இனியர் அறிகநீ
அன்பர் எனக்கே அவர் (12:19)
-----
ye tu dharmamritam idam
yathoktam paryupasate
sraddadhana mat-parama
bhaktas te ’tiva me priyah
ஏத்தும் நெறியதனை ஏற்றென் உளவிழைவைக்
காத்தெமை நம்பும் கருத்தாளர் - மாத்திரமாய்
என்னை முதற்பொருளாய் ஏற்போர் அறிகநீ
அன்பர் எனக்கே அவர் (12:20)
-----
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 |
