கீதை அறிகநீ - அத்தியாயம் 13
rsibhir bahudha gitam
chandobhir vividhaih prithak
brahma-sutra-padais caiva
hetumadbhir viniscitaih
செயல்ஞானம் தேர்ந்தோனைத் தெள்ளறிவை நன்றாய்
இயம்பிடும் வேதநூல் என்றும் - நயம்பட
சீரேற்றி வேதாந்தம் செப்பும் அறிகநீ
காரணமும் காரியமு மாய் (13:5)
-----
amanitvam adambhitvam
ahimsa ksantir arjavam
acaryopasanam shaucam
sthairyam atma-vinigrahah
பணிவு,செருக் கின்மை, பரிவு பொறுமை
அணிசெய் எளிமைஅறி வார்வம் - நனிதூய்மை
திண்நெஞ்சம் தன்னடக்கம் சீரென் றறிகநீ
உண்மையிவை ஞானம் உணர் (13:8)
-----
indriyarthesu vairagyam
anahankara eva ca
janma-mrityu-jara-vyadhi-
duhkha-dosanudarshanam
பொறிசாரா உள்ளமொடு பொய்யகந்தை அற்றுப்
பிறப்பிறப்பு மூப்பு பிணியென்(று) - அறிந்தவற்றின்
பண்போ டியைந்திடுமுன் பார்வை அறிகநீ
உண்மையிவை ஞானம் உணர் (13:9)
-----
ashaktir anabhisvangah
putra-dara-grhadisu
nityam ca sama-cittatvam
istanistopapattisu
சுற்றம் மனைமக்கள் சொந்தமறுத் தேதிலும்
பற்றற்ற வாழ்நெறிப் பக்குவமும் - பெற்றிடும்
இன்புதுன்பை ஓர்நிலையில் ஏற்றல் அறிகநீ
உண்மையிதே ஞான உணர்வு (13:10)
-----
mayi cananya-yogena
bhaktir avyabhicarini
vivikta-desa-sevitvam
aratir jana-samsadi
மாறா நிலையார் மயக்கமிலாப் பக்தியும்
வேறாய்த் தனித்திருக்கும் வேட்கையும் - கூறாகப்
பண்ணையிற் கூடாத பண்பும் அறிகநீ
உண்மையிவை ஞானம் உணர் (13:11)
பண்ணை - மக்கள் திரள்
-----
adhyatma-jnana-nityatvam
tattva-jnanartha-darshanam
etaj jnanam iti proktam
ajnanam yad ato ’nyatha
உள்ளத்தே தன்னிலை உள்ளுணர்தல் பின்தெளிதல்
தெள்ளறிவின் மெய்ஞ்ஞானத் தேடலென்(று) - உள்ளவிவை
ஞான மெனயாம் நவில்வோம் அறிகநீ
ஏனையவை அஞ்ஞான ஈர்ப்பு (13:12)
-----
sarvendriya-gunabhasam
sarvendriya-vivarjitam
asaktam sarva-bhrc caiva
nirgunam guna-bhoktr ca
உண்டெனினும் இல்லா உணர்வு; தனித்திருந்தும்
அண்டம்வாழ் யார்க்கும் அடைக்கலமாம் - விண்டறியா
மாயையாய் ஆகும் மனிதர்க் கறிகநீ
ஆயினுமெல் லாமறியும் அஃது (13:15)
-----
bahir antas ca bhutanam
acaram caram eva ca
suksmatvat tad avijneyam
dura-stham cantike ca tat
அகம்புறம் ஆகி அனைத்துயிர்க்கும்; எங்கும்
நிகரும் பொருளார் நிகழ்வாய் - மிகநுட்பச்
சாரமாய், சிந்தைக் கடங்கா ததறிகநீ
தூரத் திருந்தும் துணை (13:16)
-----
avibhaktam ca bhutesu
vibhaktam iva ca sthitam
bhuta-bhartr ca taj jneyam
grasisnu prabhavishnu ca
உயிரனைத்தின் உள்ளாய் உறைந்து பிரிந்தும்
பயில்வதவ் வொற்றைப் பரமே - வியனுலகில்
எப்பொருட்கும் காப்பாய் இயங்கும் அறிகநீ
அப்பொருட் காதியும் அஃது (13:17)
-----
jyotisam api taj jyotis
tamasah param ucyate
jnanam jneyam jnana-gamyam
hridi sarvasya visthitam
ஆன தொளிமுதலாய் ஆழிருளின் மேலாகி
ஞானமாய் ஞானத்தின் நற்கருவாய் - ஞானத்தின்
தேடுபொரு ளாயும் திகழும் அறிகநீ
ஊடாய் உளத்தும் உளது (13:18)
-----
prakritim purusham caiva
viddhy anadi ubhav api
vikarams ca gunams caiva
viddhi prakriti-sambhavan
இயற்கை இயல்பதுவும் ஈங்கார் உடலும்
சுயமெழு ஆதியிலாத் தோற்றம் - செயற்குணமும்
ஒவ்வாப் பொருள்முரணும் ஊடாய் அறிகநீ
இவ்வியற்கை ஈன்ற திவை (13:20)
-----
karya-karana-kartrtve
hetuh prakritir ucyate
purushah sukha-duhkhanam
bhoktrtve hetur ucyate
பொருள்வழி எண்ணம் புரிசெயலி வற்றின்
கருவாய் இயற்கையைக் காண்க - பெருநிலத்தே
இன்புதுன்பின் காரணம் ஏதென் றறிகநீ
என்றும் உடலே அது (13:21)
-----
purushah prakriti-stho hi
bhunkte prakriti-jan gunan
karanam guna-sango ’sya
sad-asad-yoni-janmasu
இயற்கையைத் துய்க்கும் இயல்புடை வாழ்வில்
மயங்குமுடற் கொண்ணிலையும் மாறும் - துயரின்பச்
சென்மங்கள் மேலும் தொடரும் அறிகநீ
கன்ம விளைவிது காண் (13:22)
-----
upadrastanumanta ca
bharta bhokta maheshvarah
paramatmeti capy ukto
dehe ’smin purushah parah
துய்க்கும் களிப்பாய்த் துணைக்கொரு தேவனாய்
மெய்யுயிர் ஆள்பவனாய் மேவிடுமே - செய்கையையும்
நோக்கி நெறிசேர்க்கும் நோன்மை யறிகநீ
யாக்கை அமர்பரமே அஃது (13:23)
-----
ya evam vetti purusham
prakritim ca gunaih saha
sarvatha vartamano ’pi
na sa bhuyo ’bhijayate
பொருளீன் பலனைப் பொதியுடலை வாழ்வு
தருமியற்கைப் பாடந் தெளிந்தோன் - பெரும்பேறாய்
மீண்டும் பிறவாது மீள்வான் அறிகநீ
யாண்டும் விடுதலை யாம் (13:24)
-----
dhyanenatmani pasyanti
kecid atmanam atmana
anye sankhyena yogena
karma-yogena capare
மன்குவித் தான்ம மறைபொருளை மானுடன்
தன்னுயிரார் ஆன்மத்தால் தானுணர்வான் - மென்மேலும்
ஞானம் வளர்த்தறிவான் நல்லோன் அறிகநீ
ஆனதுசெய்(து) ஏகுவனும் ஆம் (13:25)
-----
anye tv evam ajanantah
srutvanyebhya upasate
te ’pi catitaranty eva
mrityum shruti-parayanah
ஆன்மீக நன்நெறியில் ஆழ மிலாதாரும்
மேன்மக்கள் சொற்கேட்டு மேதினியில் - மேம்போக்காய்
என்னைத் தொழுகின்றார் என்ப தறிகநீ
என்றுமவர்க் கில்லை இறப்பு (13:26)
-----
yavat sanjayate kincit
sattvam sthavara-jangamam
kshetra-kshetrajna-samyogat
tad viddhi bharatarsabha
மெய்காண் நிலைநகர் விளைவேற்கும் பேரண்ட
உய்பொருள் யாவையும் ஒன்றாய்க்காண் - செய்பவனும்
செய்செயலும் சேர்ந்ததித் தோற்றம் அறிகநீ
கையொடுகை இவ்விரண்டும் காண் (13:27)
-----
samam sarveshu bhutesu
tisthantam paramesvaram
vinasyatsv avinasyantam
yah pasyati sa pasyati
பரம்பொருளோ டான்மம் பழகுபொருட் டோறும்
நிரந்தர நீட்டுணையாய் நிற்கும் - நரவுடல்
மாண்டொழிந்தும் இவ்விரண்டும் மாளா தறிகநீ
காண்பவன் ஈதறிந்தோன் காண் (13:28)
-----
samam pasyan hi sarvatra
samavasthitam ishvaram
na hinasty atmanatmanam
tato yati param gatim
அனைத்தும் பரம்பொருளால் ஆன துணர்வோன்
தனையழிக்கும் வண்ணஞ் சரியும் - மனவோட்டம்
சாராது காக்கும் தகைமாண் அறிகநீ
பாரேகிச் சேர்வான் பரம் (13:29)
-----
prakrityaiva ca karmani
kriyamanani sarvasah
yah pasyati tathatmanam
akartaram sa pasyati
இயற்கையீன் இவ்வுடலம் இம்மையிற் செய்யுஞ்
செயல்யாவும் கண்டு தெளிந்தோன் - இயைஆன்மம்
செய்யாதே தென்றும் தெளிவான்; அறிகநீ
மெய்யான பார்வையிதே மெய் (13:30)
-----
yada bhuta-prithag-bhavam
eka-stham anupasyati
tata eva ca vistaram
brahma sampadyate tada
எல்லா உடல்களையும் ஏற்றியக்கும் ஆன்மமதைப்
பல்வேறாய்ப் பார்க்காத பார்வையால் - எல்லாமாய்
ஆகியஆன் மத்தை அறிந்தோன், அறிகநீ
ஏகுவான் மேலோர் இடம் (13:31)
-----
anaditvan nirgunatvat
paramatmayam avyayah
sarira-stho ’pi kaunteya
na karoti na lipyate
ஆதியந்தம் இல்லாதிவ் வான்மம் பொருட்குணங்கள்
ஏதையும் ஏற்கா இயல்புடைத்து - பூதவுடல்
செல்லும் வழியென்றும் சேரா தறிகநீ
இல்லைபிணை செய்கை இதற்கு (13:32)
-----
yatha sarva-gatam sauksmyad
akasam nopalipyate
sarvatravasthito dehe
tathatma nopalipyate
எங்கும் நிறைந்தும் எழிலார் நெடுவானம்
பங்காய் எதனுள்ளும் படியாதே - அங்ஙனமே
ஆனது வானமாய் ஆன்மம் அறிகநீ
ஊனுடல் ஆன்ம உறவு (13:33)
-----
yatha prakasayaty ekah
krtsnam lokam imam ravih
kshetram ksetri tatha krtsnam
prakasayati bharata
அண்டப் பரப்பெலாம் ஆதவன்றன் மேனியொளி
கொண்டிருள் நீக்கிக் கோலமிடும் - உண்ணடத்தி
ஊன்வழி மேவும் உணர்வை யறிகநீ
ஆன்மத் தொளிரும் அகம் (13:34)
-----
kshetra-kshetrajnayor evam
antaram jnana-caksusa
bhuta-prakriti-moksham ca
ye vidur yanti te param
ஊனுடலோ டான்மத்தின் ஊடான வேற்றுமையை
ஞானத்தின் வாயில் நயங்காண்போர் - மானுடத்தின்
மோகப் பிணையறுக்கும் மேலோர் அறிகநீ
ஏகமிவர் காண்ப தெளிது (9:35)
-----
கீதை அறிக நீ
அத்தியாயம்
| 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07 | 08 | 09 | 10 | 11 | 12 | 13 |
