skip to content

கீதைஅறிகநீ - அத்தியாயம் 14

கீதை அறிகநீ - அத்தியாயம் 14

-----

mama yonir mahad brahma
tasmin garbham dadhamy aham
sambhavah sarva-bhutanam
tato bhavati bharata

அண்டப் பொருட்கெல்லாம் ஆதியாய் ஓர்பிரம்மம்
உண்டாக்கி யாமே உருவீந்தோம்
வாழினங்கள் வாழுமிவ் வையத் தறிகநீ
காழவைக் கஃதென்றே காண் (14:3)
காழ் = வித்து

-----

sattvam rajas tama iti
gunah prakriti-sambhavah
nibadhnanti maha-baho
dehe dehinam avyayam

நன்னயம் பேராசை நல்லுளத் தஞ்ஞானம்
என்றிவை மூன்றும் இயல்பென்க - தன்குணமாய்
ஆன்மம் எடுத்திவற்றை ஆளு மறிகநீ
மூன்றின் பகுப்பே முதிர்வு (14:5)

-----

tatra sattvam nirmalatvat
prakasakam anamayam
sukha-sangena badhnati
jnana-sangena canagha

மீதி இரண்டின் மிகுநன்று நன்னயந்தான்
சோதியாய்ப் பாவத் துயர்துடைக்கும் - பூதலத்தே
உய்குணமாய் இஃதே உடையோர்க் கறிகநீ
மெய்ஞ்ஞானம் இன்பம் மிகும் (14:6)

-----

rajo ragatmakam viddhi
trsna-sanga-samudbhavam
tan nibadhnati kaunteya
karma-sangena dehinam

ஆசையெனும் இப்பண்(பு) அகத்தார் அளவிலாப்
பாசத்தி னாற்பிறக்கும் பாருலகில் - கோசவுடல்
தோன்றும் பொருள்யாவும் துய்க்கும்; அறிகநீ
ஊன்கண் பொறியின் உறவு (14:7)

-----

tamas tv ajnana-jam viddhi
mohanam sarva-dehinam
pramadalasya-nidrabhis
tan nibadhnati bharata

பாழிருள் ஒக்குநிலைப் பண்பாம் அறியாமை
வாழுயிரின் சிந்தை மயக்குங்கால் - ஆழுறக்கம்
ஊன்மந்த மோடுழற்சி உண்டா குமறிகநீ
ஆன்மப் பிணைகள் அவை (14:8)

-----

sattvam sukhe sanjayati
rajah karmani bharata
jnanam avrtya tu tamah
pramade sanjayaty uta

நன்னயம் இன்ப நலங்காட்டும்; பேராசை
முன்னும் செயல்களில் முன்நிற்கும் - தன்மடைமை
என்றும் மதிமயக்கும் என்ப தறிகநீ
உன்குணமிம் மூன்றென் றுணர் (14:9)

-----

rajas tamas cabhibhuya
sattvam bhavati bharata
rajah sattvam tamas caiva
tamah sattvam rajas tatha

நன்னயம் பேராசை ஞானமின்மை இம்மூன்றில்
ஒன்றுமற்றி ரண்டை ஒடுக்குங்காண் - பின்னரதை
வென்றெழும் மற்றிரண்டும் மேலே, அறிகநீ
என்றுமெழும் போட்டி இது (14:10)

-----

sarva-dvaresu dehe ’smin
prakasa upajayate
jnanam yada tada vidyad
vivrddham sattvam ity uta

நன்னயத்தின் ஊடாயந் நற்குணங்கள் மேலெழுந்து
முன்னுதற்காய் எந்நாளுன் முன்நிற்கும்? - உன்மதியின்
ஊனமழித் துள்ளுடற்காண் வாச லிலறிகநீ
ஞானம் ஒளிருமந் நாள் (14:11)

-----

lobhah pravrttir arambhah
karmanam asamah sprha
rajasy etani jayante
vivrddhe bharatarsabha

ஆசையின் ஆதியென ஆனதே காண்பொருள்மேல்
பாசம் செயற்றன் பலன்தேடல் - கூசாது
முன்னுமனம் இச்சையொடு மோகம் அறிகநீ
முன்னரிவை, ஆசை முடிவு (14:12)

-----

aprakaso ’pravrttis ca
pramado moha eva ca
tamasy etani jayante
vivrddhe kuru-nandana

என்றுளத் தஞ்ஞானம் ஏறுநிலை பெற்றிடுமோ
அன்றுளத்தே ஈதெல்லாம் அண்டிவரும் - மன்னுமிருள்
விஞ்சுமடி மூடம் வெறுங்கா னலறிகநீ
அஞ்ஞானத் தோற்றம் அவை (14:13)
மடி = சோம்பல்

-----

yada sattve pravrddhe tu
pralayam yati deha-bhrt
tadottama-vidam lokan
amalan pratipadyate

நன்னயம் பெற்றோங்கும் நற்குணத்தான் வாழ்வறுத்துத்
தன்னுடலை விட்டான்மம் தான்பிரிந்தும் - உன்னதஞ்சேர்
தூயதோர் மேன்நிலையைத் துய்ப்பான் அறிகநீ
போயமைவான் வானார் புறத்து (14:14)

-----

rajasi pralayam gatva
karma-sangisu jayate
tatha pralinas tamasi
mudha-yonisu jayate

ஆசையில் வாழ்விழந்தோன் அண்டும் மறுபிறப்பில்
பாசம் பலன்கருதும் பண்பேற்பான் - நீசமட
உள்ளத்தான் மீண்டும் உயிர்த்தும் அறிகநீ
கொள்வான் விலங்கின் குணம் (14:15)

-----

karmanah sukritasyahuh
sattvikam nirmalam phalam
rajasas tu phalam duhkham
ajnanam tamasah phalam

நன்னயம் என்றும் நலஞ்சேர்க்கும் மோகத்து
முன்னுசெயல் துன்பத்தை முன்னீர்க்கும் - சின்னமதி
சேர்விளைவாய் மூடம் செழிக்கும் அறிகநீ
ஓர்விளைவிம் மூன்றில் உயர்வு (14:16)

-----

sattvat sanjayate jnanam
rajaso lobha eva ca
pramada-mohau tamaso
bhavato ’jnanam eva ca

நன்னயம் ஈனும் நல்லறிவை ஆசையால்
என்றும் பேராசை எழும்பிடுமே - உன்மடைமை
மூர்கம் மயக்கமெனும் மூன்றை அறிகநீ
சேர்க்குமறி யாமை தெரிந்து (14:17)

-----

urdhvam gacchanti sattva-stha
madhye tisthanti rajasah
jaghanya-guna-vrtti-stha
adho gacchanti tamasah

மேனிலையைக் கண்டிடுவர் மேம்பட்ட நன்னயத்தார்
நானிலத் துழல்வரிச்சை நாட்டத்தார் - ஊனமதி
கொண்டமைவோர் கீழ்நிலையைக் கொள்வர் அறிகநீ
யாண்டுமமை உண்மை இது (14:18)

-----

nanyam gunebhyah kartaram
yada drastanupasyati
gunebhyas ca param vetti
mad-bhavam so ’dhigacchati

முன்னும் செயல்களை முன்னியக்க முக்குணங்கள்
அன்றினும் வேறில்லை அஃதுணர்ந்தோன் - என்னுயர்வை
முக்குணத்தின் மேலாய் மொழிவோன் அறிகநீ
தக்கநிலை ஏற்பான் தழைத்து (14:19)

-----

gunan etan atitya trin
dehi deha-samudbhavan
janma-mrityu-jara-duhkhair
vimukto ’mrtam asnute

முக்குணத்தின் ஆன்மமது மேன்மையுற மானுடத்தின்
சக்கரமாம் மூப்புயிர்ப்பு சாக்காடு - துக்கநிலை
என்பவையீன் கேடெலாம் ஏகும் அறிகநீ
அன்பருக்கிவ் வாழ்வே அமுது (14:20)

-----

udasina-vad asino
gunair yo na vicalyate
guna vartanta ity evam
yo ’vatishthati nengate

அடுசெயலால் நெஞ்சசையா ஆளுமை, வாழ்வில்
நடுநிலையோ டொன்றும் நடத்தை - உடனுடையோன்
அக்குணங்கள் ஆள்வ தறிவான் அறிகநீ
முக்குணத்தின் மேன்மை மிகுத்து (14:23)

-----

sama-duhkha-sukhah sva-sthah
sama-lostasma-kancanah
tulya-priyapriyo dhiras
tulya-nindatma-samstutih

தன்னிலையான்; இன்புதுன்பைச் சார்வான் சமனிலையில்;
பொன்மண்கல் ஒன்றென்பான்; போதைவெறுப் - பென்றிலான்;
நேர்நிலையான்; ஏச்சிசையை நீப்பான் அறிகநீ
சேர்குணங்கள் ஆள்வான் தெளிந்து (14:24)

-----

manapamanayos tulyas
tulyo mitrari-pakshayoh
sarvarambha-parityagi
gunatitah sa ucyate

பெருமையொ டொன்றெனப் பேரிழிவும் ஏற்போன்
ஒருநிலையில் நட்புபகை உள்ளி - வரும்பலனை
பார்த்துப் பணிசெய்யாப் பண்பால் அறிகநீ
சேர்குணங்கள் ஆள்வான் தெளிந்து (14:25)

-----

mam ca yo ’vyabhicarena
bhakti-yogena sevate
sa gunan samatityaitan
brahma-bhuyaya kalpate

எக்கணத்து மாறா திடைவிடா தோர்நிலையில்
தக்கநெறி யோடேத்தும் சால்புடையான் - முக்குணத்தை
வெல்லுநெறி கண்டடைவான் மேன்மை அறிகநீ
நல்கும் பரமே நலம் (14:26)

-----

brahmano hi pratishthaham
amritasyavyayasya ca
sasvatasya ca dharmasya
sukhasyaikantikasya ca

என்றும் அழியா(து) இழப்பிலா தோர்நிலையில்
தொன்றுதொட்(டு) இன்றும் தொடர்பரமே - ஒன்றிஉள்ளத்(து)
இன்பநிலைக்(கு) ஊற்றாய் இருக்கும் அறிகநீ
என்றுமதன் மூலமாய் யாம் (14:27)

-----

அத்தியாயம்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.