குன்றிலே விளக்கெரிந்தால்!
மன்றிலே நிழலைக் காட்டி
.. மயக்கிடும் நடிகர் கூட்டம்!
சென்றவர் படத்தைப் பாலால்
.. திருமுழுக் காட்டும் போதும்
நின்றழும் குழவிக் கூட்ட
.. நெஞ்சிலே ஈரம் இல்லை!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
நன்றிசொல் தொண்டன் ஆகி
.. நாயகன் கட்சிக் கூட்டம்
சென்றொரு துண்டைத் தோளில்
.. சேர்த்தவர் காலில் வீழ்வோன்,
கன்றெனத் தன்னைப் பெற்றோன்
.. காலடி மறந்த தேனோ?
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
முன்றிலை மூடி விட்டு
.. முகத்திரை அணிந்து நெஞ்சுள்
அன்றென அறிந்தும் வஞ்சம்
.. அளித்தஅச் செல்வத் தாலே
அன்னவன் அமையும் கோவில்
.. ஆக்கிடும் எண்ணம் ஏனோ?
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
தன்னுளத் துயர்வு வேண்டின்
.. தானெனும் அகந்தை மாய்க்க!
பொன்வளம் பதவி போகம்
.. புகழெனும் மாயை எல்லாம்
முன்னுளோர் நோக்கும் நோக்கின்
.. முறையெழும் எண்ணத் தாலே!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
வன்மனம் காட்டும் போக்கில்
.. வாழ்ந்திடும் வாழ்க்கை கொண்டு
தன்னிமை மூடிக் கொண்டு
.. தான் தரும் தத்து வத்தை
முன்னுளோர் எற்க வேண்டி
.. முறையிடல் தகுந்த தன்று!
குன்றிலே விளக்கெ ரிந்தால்
.. குடிசையின் இருளா மாறும்?
