skip to content

மழலையர் சிரிப்பு!

மழலையர் சிரிப்பு!

சின்னச் சிரிப்பில் ஒருகவிதை - புதுச்
.. சிந்தாய் மலரும் தருணமிது!
கன்னம் குழியக் கவியமுது - நம்
.. கண்ணில் படிந்து வழிகிறது!

வெள்ளை மனத்தின் விடியல்கள் - அவை
.. விடிந்தும் நிலவே தவழ்கிறது!
கள்ளின் சுவைசேர் கனியமுது! - அதில்
.. களித்துக் கருக்கல் கரைகிறது!

தொற்றிப் படரும் துளிர்சிரிப்பு! - மனம்
.. தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது!
முற்றும் துறந்தும் முனிவருளம் - இதன்
.. மொட்டுச் சிரிப்பால் முகிழ்க்கிறது!

இதழில் இழையும் சிரிப்பதனால் - நம்
.. இதயம் இனிதாய் இசைக்கிறது!
அதரம் பொழியும் அசைவுகளால் - வாய்
.. அரங்கில் பரதம் நடக்கிறது!

குட்டிக் குமுதம் விரிகிறது! - குழல்
.. குழையும் இசையைப் பொழிகிறது!
பட்டு பனியால் நனைகிறது! - மனம்
.. பாட்டில் பரவசம் அடைகிறது!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.