skip to content

நிர்வாணம்

நிர்வாணம்

எத்தனை ஆடைகொண்டேன்? - இந்த வாழ்வெலாம்
.. என்னுரு நான்மறைத்தேன்!
நித்தமும் நூறுகொண்டேன்! - நீள் பொய்களால்
.. நிசமதை நான்சிதைத்தேன்!
சத்தியம் வெற்றிடந்தான்! - சதி செய்ததைச்
.. சாத்திடத் தாளுமுண்டோ?
மொத்தமாய் அஃதிருப்பின் - மூடுமென்
.. முயற்சியில் ஏதுபயன்?

பட்டப் பகலினிலே - பாதை தெரிந்திடப்
.. பாவை விளக்கெதற்கோ?
சொட்டும் மதுக்கனியின் - தோட்டம் அருகிருந்தும்
.. சோற்றுப் பசியெதற்கோ?
எட்டும் தொலைவிருந்தும் - எழ மனமிலை,
.. ஏணிகள் என்னசெய்யும்?
வெட்டி எறிந்துநின்றேன் - ஒவ்வொன்றாய்!
.. வெற்றுடை ஏதுக்கிங்கே?

காமம் கழிகிறதே! - கண்ட பதவிகண்
.. காதல் ஒழிகிறதே!
நாமம் குறைந்துளத்தே - நான் என்னும்
.. நாட்டம் தொலைகிறதே!
சேமம் தருவதற்காய்ச் - சேர்த்த பெருநிதி
.. செலவினில் தீர்கிறதே!
ஆமென் உயிர்கலந்த - அந்த உறவுகள்
.. அனைத்தும் விலகிடுதே!

போகம் புளிக்கின்றதே! - பொய் வாழ்வதன்
.. புதிர்கள் புரிகின்றதே!
தேகம் சுடுகின்றதே! - தீயால் உடல்
.. தீர்ந்துத் தொலைகின்றதே!
ஆகம் அதுவெடிக்க - அகம் விடுத்தென்
.. ஆன்மம் எழுகின்றதே!
ஏகம் உனையடைய - இப்பிறப்பினில்
.. எதற்கினி ஆடையிங்கே?
(ஆகம் = மார்பு/மனம்)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.