skip to content

நம்பினார் கெடுவதில்லை!

நம்பினார் கெடுவதில்லை!

காற்றிலே அலையும் பூச்சி
.. காதலாய்ப் பயிரில் ஏறிச்
சாற்றினை உரிய மிஞ்சும்
.. தாளதே தமக்கென் றாலும்
சோற்றினைப் பின்னர் நாடும்
.. சோர்விலா உழவர் நெல்லின்
நாற்றினை நட்டுச் செல்வர்!
.. நம்பினார் கெடுவ தில்லை!

காவெனக் கரையுங் காகம்
.. கரையிலா நேரம் பார்த்துத்
தாவிடும் தவளை சேற்றின்
.. தளத்திலே அமர்ந்துப் பூச்சி
மேவிடும் தூரம் நோக்கி
.. மெல்லவே வாய் திறந்து
நாவினை நீட்டப் பார்க்கும்!
.. நம்பினார் கெடுவ தில்லை!

பஞ்சிலே கூடு கட்டி
.. பருந்துகள் தாக்கா வண்ணம்
குஞ்சினை இருத்திக் காகம்
.. கொஞ்சிடும் மூக்கால்! பின்னர்த்
துஞ்சிடும் நேரம் பார்த்துத்
.. துணிவுடன் இரைக்காய்ச் செல்லும்
நெஞ்சிடை நிலைக்கும் எண்ணம்,
.. நம்பினார் கெடுவ தில்லை!

வல்லிய தாயும் நாகம்
.. வயிற்றெழும் பசியைப் போக்க
அல்வணக் காகம் இல்லா
.. அஃதொரு நொடிக்காய் ஏங்கும்!
மெல்லுடற் குஞ்சு வாழும்
.. மேலுள கிளையை நோக்கி
நல்லிரை அஃதென் றெண்ணும்!
.. நம்பினார் கெடுவ தில்லை!

இம்மிதான் அசைவென் றாலும்
.. எத்தொலை வென்ற போதும்
தம்மிரு கண்க ளாலே
.. தரைநகர் பொருளை நோக்கும்
அம்முறை அறிந்த தாலே
.. அலையுமப் பாம்பை உண்ண
நம்பியே பறக்கும் செம்புள்!
.. நம்பினார் கெடுவ தில்லை!

கோடென மெலிந்த நூலைக்
.. கொண்டொரு வலையைச் செய்து
வேடனும் அடர்ந்த காட்டில்
.. விரித்தெதிர் பார்த்தி ருந்தால்
ஊடுள நெல்லை உண்ணும்
.. உணர்வினால் மயங்கி மண்ணை
நாடிடும் புள்ளும் கையில்!
.. நம்பினார் கெடுவ தில்லை!

தூளென அண்டம் தன்னில்
.. தோன்றியே மறையும் போதும்
ஆளுவம் உலகை என்னும்
.. ஆசையால் அடுத்த காலை
வேளைநம் கண்கள் மீண்டும்
.. விழித்திடும், இன்று போலே
நாளையும் விரியும் என்று
.. நம்பினார் கெடுவ தில்லை!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.