கவிதைக் கையூட்டு!
(கிளிக்கண்ணி)
கற்பனை மத்தெடுத்துக் காலம் கரைத்துநின்றேன்!
பிற்பகல் போனதடி! - கிளியே
பின்னுமவன் காணவில்லை!
காணாப் பொழுதவனைக் கண்ணில் சிறைபிடித்தேன்!
ஞானப் பொழுததுவே! - கிளியே
நல்லவன் ஆகிநின்றான்!
சுமையாய் அவன்மீது சொக்கும் விழிவிலக்க
இமைநான் படபடத்தேன்! - கிளியே
என்னவன் ஏன்பறந்தான்?
சொப்பனம் கண்டிருந்தும் சொக்கிச் சுகித்திருந்தும்
தப்பிதம் செய்யவில்லை! - கிளியே
தண்டனை ஏதுக்கடி?
காக்கும் எனைவிடுத்துக் காமத் துழல்பவனாய்
நோக்கும் உலகுரைக்கும்! - கிளியே
நொந்திடும் என்மனதும்!
முன்னர் அவன்நிற்பான்! முறையோ எனுங்கேள்வி
என்னுள் எழுந்துநிற்கும்! - கிளியே
இயம்பா(து) இதழ்தவிக்கும்!
சொல்லுக தாமதமேன்? சொற்கள் வருமுன்பே,
மெல்ல இதழ்பதிப்பான்! - கிளியே
மேற்சொலல் ஏதங்கே?
கண்ணுள் சிறைபிடித்தாய்! காலம் கடந்ததென
என்னைப் பழித்திடுவான்! - கிளியே
ஏய்ப்பதில் எத்தனடி!
என்னுள் இருந்திருந்தும் இத்தனை நாழிகையாய்
முன்னர் வரவிலைஏன்? - கிளியே
மொழிவேன் ஒருவழியாய்!
எதற்கும் விடையளியா தென்னை மயக்கிஅவன்
கதைப்பான், கவிபடிப்பான்! - கிளியே
கவிதையும் கையூட்டோ?
