skip to content

இருட்டில் வெளிச்சம்

இருட்டில் வெளிச்சம்

கொஞ்சும் அவரெழிற் கோலம் நிறைந்துக்
.. குழையும் கனவுலகில்
நெஞ்சம் நெகிழும் நிமிடம் இமையை
.. நீயேன் பிரிக்கின்றாய்? - தோழி
.. நின்றேன் முறைக்கின்றாய்?

கனவென் றெதையோ கற்பனை செய்துன்
.. காலம் கழிக்கின்றாய்!
நனவில் அவர்முன் நடப்பார் என்றும்
.. ஞானம் படிக்கின்றாய்! - தலைவி
.. நன்றாய் நடிக்கின்றாய்!

இருட்டுப் பொழுதில் இணைப்பின் றவரை
.. இழந்து தவிக்கின்றேன்!
கருப்புத் தருணம் கண்ணில் முகமும்
.. கலந்து பிரிந்ததுவே! - தோழி
.. கண்ணுள் அவருருவே!

காட்சி அறியாக் கருக்கல் பொழுதில்
.. காண வழியுண்டோ?
காட்டி மறைந்தார் முகத்தை எனதினம்
.. கரைதலும் வீணன்றோ? - தலைவி
.. கானலில் நீரென்றோ?

அகலின் ஒளியால் அடர்ந்த இருளும்
.. அகலும் அறியாயோ?
பகரும் மொழியாய்ப் பார்வை மனத்தின்
.. பாசம் விளக்குதற்கே! - தோழி
.. பகலில் விளக்கெதற்கோ?

எண்ணும் கணமவர் எங்கும் இருப்பார்
.. எனத்தான் உரைக்கின்றாய்!
இன்னும் அவர்முன் இலையெனும் போதும்
.. இதையே மொழிகின்றாய்! - தலைவி
.. இதையேன் மெய்யென்றாய்?

உண்மை மனத்தின் உறையும் நினைவின்
.. உணர்வுகள் பொய்யாமோ?
கண்ணில் தெரிந்திடும் காட்சியும் பார்வையும்
.. காதலும் மெய்யென்றால் - தோழி
.. காதலன் மெய்யன்றோ?

மெய்யென் றவரை மிகையாய் மொழியும்
.. முறையேன் புரியவிலை!
பொய்யென என்னுரை பொய்க்கச் செய்யும்
.. புலமை அவர்க்கிலையோ? - தலைவி
.. புதிர்தான் அவர்நிலையோ?

சினக்கும் முறையும் தொடரும் பகையும்
.. சிறியோர் வழக்கன்றோ?
உனக்கும் தெரிவார் ஒருவர் அவர்தம்
.. உணர்வில் உறைந்துவிடு! - தோழி
.. உள்ளம் திறந்துவிடு!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.