தனிமரம்
தாங்கக் கரையோரம்
தளும்புர தண்ணிபோல
ஏங்குதே மனசதுக்கு
இன்னும்நீ சொல்லலையே!
ஒட்டுகிற போதுமட்டும்
ஒண்ணொண்ணா சொல்லிவச்சே!
வெட்டிகிட்டு போனதையேன்
வெளக்காம வுட்டுபுட்டே?
கட்டிகிட்டே கண்ணாலம்!
காடுதாண்டி பொண்ணெடுத்தே!
தொட்டுகிட்ட பொம்பளைநான்!
சொல்லாம வுட்டுபுட்டே!
கண்ணால களவாடி
கல்லுலேதான் நாருரிச்சே!
பொண்ணான எம்மனச
பூவாக்கி செறை புடிச்சே!
பூவாக போனபின்னும்
புதுமால கெடைக்கலையே!
ஆவாத அதைநெனச்சி
அடிநெஞ்சு துடிக்குதைய்யா! (10)
நெல்லடிக்கும் களத்துலதான்
நெஞ்சுகுழி பாத்துநின்னே!
கல்லடிச்சே! கண்ணடிச்சே!
காத்தடிக்க கண்ணும் வச்சே!
உன்ன வெச்சே நெஞ்சுக்குள்ள!
உசுரைமொத்தம் உறிஞ்சிகிட்டே!
தின்னுபுட்ட என்மனச!
தித்திப்புல நான் தெகச்சேன்!
அண்ட கொத்தும் சாக்குலநீ
அத்தனையும் பண்ணிபுட்டே!
மண்ண கொத்தி போடாம
மனச இல்ல கொத்திபுட்டே?
கொத்துபட்ட நெஞ்சுக்குள்ள
கோடைமழை பெய்யரச்ச
வத்திவச்சே! வெடிய வச்சே!
வானவில்ல வளைச்சு வச்சே!
வானவில்ல நான் படுக்க
வக்கணையா ஆட்டிவச்சே!
தோணலையே கண்தொறந்தா
சோதனையா போகுமுன்னு! (20)
கனவுலேதான் நான் புகஞ்சேன்!
காத்தூதி குளிர்காஞ்சே!
தெனவொனக்கு! நீசிரிச்சே!
தெரியாம நான்சிரிச்சேன்!
சிரிப்பாலே மயக்கிபுட்டே!
சில்லறையா ஆக்கிபுட்டே!
நெருப்பாத்தான் நானிருந்தேன்!
நீரூத்தி அணச்சிபுட்டே!
தீக்குச்சி ஒன்னுகொடுத்து
தேனுவெல்லம் வாங்கிகிட்டே!
தீத்துபுட்ட என்கணக்க!
தீயுமில்ல! தேனுமில்ல!
விரிஞ்சபூ சந்தையிலே
விக்காது! விலையேது?
தெரிஞ்சும் உன்ன நெருங்கவிட்டேன்!
தீயிலில்ல தெனங்குளிச்சேன்!
சாவியா நா போனமுன்னா
தண்ணிமடை மாத்திகிட்டே?
தூவுமோ மானமுன்னு
தொயரத்துலே நாங்கெடக்கேன்! (30)
கண்ணுகொத்தி பாம்பு ரெண்டு
கடிச்சி பல்லு பதிஞ்சிருக்கு!
என்னொடம்பு இளச்சிருக்கு!
இன்னுங்கூட வெஷமிருக்கு!
பாம்புகண்டா பயமெதுக்கு?
பல்லுலத்தான் வெஷமிருக்கும்!
ஆம்பளங்க ஆச பட்டா
ஆயிசுக்கும் வெஷமிருக்கும்!
பட்டுத்தான் தெரிஞ்சிகிட்டேன்!
பட்டமரம் ஆயிநிக்கேன்!
சுட்டுத்தான் புரிஞ்சிகிட்டேன்!
சூனியத்த அனுபவிக்கேன்!
கேப்பாரும் யாருமில்ல!
கேள்வி இல்லே! பதிலுமில்லே!
தோப்புமில்ல! தொரவுமில்ல!
தொணைக்கி இல்லா தனிமரம் நான்!
மங்காத்தா கோவிலுலே
மஞ்சகட்டி வுட்டுபுட்டேன்!
அங்காச்சும் கொணங்காட்டு!
அட, இனிமே நான்எதுக்கு! (40)
