skip to content

எண்ணின் வேந்தன் இராமானுஜன்

எண்ணின் வேந்தன் இராமானுஜன்
ஸ்ரீனிவாஸ ராமானுஜன் (22 December 1887 – 26 April 1920)

சூத்திரத்தில் எண்களினைத் தொகுத்துக் காட்டும்
.. சூக்குமத்தை அறிந்தவன்தான்! தொடரும் பேரெண்
சாத்திரத்தில் தனிஆளாய்த் தரணி போற்றும்
.. சாதனைகள் புரிந்தவன்தான்! சான்றை எண்ணும்
மாத்திரத்தில் நிரூபணமாய் மன்றில் வைக்கும்
.. மந்திரத்தை அறிந்தவன்தான்! மனதால் எண்கள்
யாத்திரையைக் குறியீடாய் யாத்துக் காட்டும்
.. இயல்பறிந்த கவிஞன்தான்! எண்ணின் கம்பன்!

ஈரோட்டில் அவதரித்த எண்ணின் வேந்தன்!
.. ஈறிலியை அறிந்ததனின் எல்லை கண்டோன்!
ஓரேட்டில் பலதேற்றம் ஒளித்து வைத்தே
.. உயராய்வுப் பொருளாக உலகுக் கீந்தோன்!
'கார்'ஓட்டும் தருணத்தும் காரின் எண்ணார்
.. கணிதத்தின் சிறப்பதனைக் களித்த நெஞ்சன்!
பாராட்டைப் பெற்றவன்தான், பாரில் யாரும்
.. பாராத பெருஞ்செல்வம் படைத்துச் சென்றான்!

ஆயுலெலாம் அறிஞர்கள் ஆய்ந்து சேர்க்கும்
.. அத்தனையும் ஐந்தாண்டில் அளித்த ஞானி!
நோயதனால் உடல்நலிந்து நொடித்த போதும்
.. நுணங்குதற்காய்ப் பொருள்படைத்தான் நூறு நூறாய்!
பாயொளியாய் எண்கணிதப் பாதை யெங்கும்
.. பரந்திருந்த இருளகற்றிப் பார்க்கச் செய்தான்!
ஆயபெரும் அறிஞனவன் அவனைப் போற்றி
.. அகிலமெலாம் போற்றுகின்ற அழகைப் பாரீர்!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.