வருக புத்தாண்டே வருக!
ஆண்டு முகிழ்த்தெழும் நாளிதுதான்!
.. அடுத்த மலரிதழ் திறக்கிறது!
நீண்ட நெடும்பெரும் காலமதில்
.. நினைவின் புதுக்கரு பிறக்கிறது!
தாண்டிக் கடந்திடும் வேளையிலே
.. சகித்தப் பெருஞ்சுமை மறக்கிறது!
மீண்டும் புதுச்சிற கேற்றுணர்வும்
.. மிகையாய் மகிழ்ச்சியில் பறக்கிறது!
இன்பக் கதிரவன் வான்வெளியில்
.. இனிதாய்ப் புதுநடை நடத்திடுவான்!
துன்பம் எனுமொரு நீர்க்குமிழி
.. தொடுக்கும் தடைகளை உடைத்திடுவான்!
முன்னர் விரிந்திடும் போருலகை
.. முனைந்து முழுதாய்க் கடந்திடுவோம்!
அன்பின் அடிப்படை நாமறிவோம்!
.. அதனால் அமைதியை அடைந்திடுவோம்!
