கணினி
ஒற்றைச் சன்னல் அதன்வழியாய்
.. உலகைக் காட்டும் புதுக்கருவி!
சுற்றி இருக்கும் சூழலதைச்
.. சுருக்கிக் காட்டும் தொலைநோக்கி!
கற்றுக் கொடுக்கும் பணிக்காகக்
.. காசே கேட்காப் பேராசன்!
வெற்றுத் திரையில் விதவிதமாய்
.. விந்தை செய்யும் மாயாவி! (1)
தொடுதல் மொழியை அறிந்தஇனம்!
.. தொய்யா துழைக்கும் பணியாளன்!
விடையை அறிய விழைவோர்க்கு
.. விளக்கம் சொல்லும் வேதாந்தி!
மடையே இல்லாப் பெருவெள்ளம்!
.. மனத்தின் போக்கில் வழிநீளும்!
கடைதான்! இருந்தும் காசில்லை!
.. காட்சிப் பொருளே வியாபாரம்! (2)
பூச்சியம் ஒன்றைப் பேருணவாய்ப்
.. புசித்து வாழும் புதுப்பிறவி!
பேச்சும் கண்ணும் தொடுகுணமும்
.. பெருசெவி இவைகொண் டிருந்தாலும்
மூச்சால் இழுத்து நறுமணத்தை
.. முகரும் விதமோர் நாசியிலை!
வீச்சால் உயர்ந்தும், புலனைந்தும்
.. விளங்கா ததனால் குறைப்பிறவி! (3)
உயிரே இல்லா உயிர்நண்பன்!
.. உள்ளம் உரைக்கும் படிநடக்கும்!
துயிலில் மூழ்கி இருந்தாலும்
.. தொடுமோர் நொடியில் தொடங்கிவிடும்!
அயலார் விரல்கள் அலையுமெனின்
.. அறிந்தே மறையும் கற்புடையாள்!
இயலா திலையே இதனிடத்தில்,
.. இருந்தும் அடக்கம் இதனியல்பே! (4)
விரல்தான் உழுது விதையிடுமோ?
.. வெள்ளைத் திரைதான் வேரேற்கும்
கரிசல் மண்ணார் வயல்வெளியோ?
.. காட்சிப் பொருள்தான் காய்ப்பாமோ?
அரிவாட் கண்கள் அவைநோக்கி
.. அறிந்து கொள்ளல் அறுவடையோ?
புரியும் நொடிதான் பசியாறிப்
.. புத்துணர் வேற்கும் பொழுதாமோ? (5)
இலையோ உளதோ எனுமாறாய்
.. இருக்கும், செல்லும்; இறையிதுவோ?
எலியோ டிருக்கும் கணபதியோ?
.. எதிலும் முதலாய் அமைகிறதே!
வலையை விரித்து நமைப்பிடிக்கும்
.. வழக்கம் கொண்ட வேடவனோ?
கலியோ? உலகம், பேரண்டம்
.. கையில் சுருங்கிப் போகிறதே! (6)
