skip to content

பன்முக தெய்வதம்

பன்முக தெய்வதம்

பாரதி...

தெய்வதத்தின் பன்முகத்தைச் தெளிந்துறவிற் கண்டவன்!
.. சேவகனாய்க் காதலனாய்ச் சீர்தொகுத்துத் தந்தவன்!
செய்கைகளே வேள்வியெனும் சித்தாந்தம் என்றவன்!
.. சித்திலெலாம் அவனுருவைச் சித்தரித்துக் கொண்டவன்!
மெய்யறிவைப் பாவிலேற்றி மெய்சிலிர்க்கச் செய்தவன்!
.. மேன்மையுடை தெய்வதத்தை மானுடத்தில் கண்டவன்!
பெய்யமுதைப் பாடல்வழி பெற்றுலகுக் கீந்தவன்!
.. பேரின்பப் புதிரவிழ்க்கும் பெருங்கவிதை நெய்தவன்! (1)

பாரதி கண்ட தெய்வதம்...

போர்த்தொடுக்கும் போதிலங்கு தேர்நடத்தித் தந்தவன்!
.. பொய்யுளத்தின் நீள்கருவப் பூண்டழியச் செய்பவன்!
கார்மழையில் ஓர்குடையாய்க் காத்துநிற்கும் காவலன்!
.. கள்ளநெஞ்சர் சொல்லுரைக்கக் காய்த்தழிக்கும் தோழனாம்!
நீர்வழியில் நாளழுகி நிலைத்துநின்ற பாசியை
.. நீக்குகின்ற வெள்ளமாகி நெஞ்சைவென்று நின்றவன்!
பார்மடியில் நானுறங்கப் பாசமுள்ள பூமியாய்ப்
.. பலகதைகள் சொல்லியென்னுட் பாவுகின்ற தாயவன்! (2)

கோத்தபொய்கள் வந்துலகைக் குலைத்துநிற்கும் போதிலே
.. கொள்கையென்ற வாளெடுத்துக் கொன்றுநிற்கும் கூற்றுவன்!
சாத்திரங்கள் கோடிதந்த சத்தியத்தின் மூலவன்!
.. தாதுவாகி அண்டரண்டம் தாம்சமைத்த தந்தையன்!
காத்துநிற்கும் ஓர்தலைவன்! காணுலகின் காவலன்!
.. கண்ணனென்றும் ஈசனென்றும் கண்ணெதிரில் நிற்பவன்!
சூத்திரங்கள் செய்துநம்மை சொக்கவைக்கும் மாயவன்!
.. சோம்பலின்றி வீடுவாசல் சுத்தமாக்கும் சேவகன்! (3)

வித்தையொன்றும் நானறியா துழன்றுநின்ற போதிலும்
.. வேதநுட்பம் கற்றுவிக்கும் வித்தகஞ்செய் வேந்தவன்!
நித்தமன்னம் தேடிஏவல் செய்துநின்ற என்னிடம்
.. நிகரிலாத செல்வமதை நீட்டுகின்ற மன்னவன்!
புத்தியென்னுள் ஆழ்ந்துறைந்துப் பூக்கவைக்கும் பாவினைப்
.. புத்தகத்தின் தாளிலேற்றிப் போற்றுகின்ற மாணவன்!
அத்தனையும் ஆக்கியவை ஆண்டபின்னர் அந்தியில்
.. அழிக்குமந்த அற்புதத்தை அறிந்துநிற்கும் சற்குரு! (4)

கன்னமதில் முத்தமிடக் கள்வெறியை ஈந்தவன்!
.. கண்ணிரண்டின் பாவையெனக் காணுமுயிர்ச் சேயவன்!
பின்னலினைப் பற்றியென்றன் பின்மறையும் மாயவன்!
.. பேதையென்றன் கைப்பிடித்துப் பேசிநிற்கும் என்மகன்!
முன்னிரவில் செண்பகக்கான் வெண்ணிலவில் ஓடைநீர்
.. மேவுகரை வாவெனவாய் வேண்டிநிற்கும் காதலன்!
என்னுளத்தின் உட்பொறியை ஈந்தியக்கி ஆள்பவன்!
.. யாதுமாகி நிற்குமவன் யாவருக்கும் தெய்வமே! (5)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.