எந்நாளோ?
பாசியிற் பழகும் தண்ணீர்
.. பருகுதற் காகா தென்றும்!
தூசிமேற் படிந்த ஆடி
.. துல்லியம் இழந்து நிற்கும்!
மாசுடை மனங்கள் தோறும்
.. மாண்பது மலிவாய்ப் போகும்!
ஆசுடை களைகள் சேர
.. அணிதமிழ் அழியும் அன்றோ!
(ஆசு=குற்றம்)
எழுத்திலே இணையும் மாசாய்
.. இலக்கணப் பிழைகள் எங்கும்!
வழக்கிலே தொலைந்த போன
.. வல்லினப் புணர்ச்சி ஒற்று!
பழக்கமென் றதனைச் சேர்க்காப்
.. பாதையில் பயணம் செய்தால்
இழப்பது தமிழை அன்றோ?
.. என்றினி மாற்றம் காண்போம்?
சொற்களா தமிழில் இல்லை?
.. தொல்தமிழ் மறுத்து நின்றோம்!
மற்றைய மொழியின் சொற்கள்
.. மலிந்துநம் மக்கள் பேச்சில்
விற்பனம் செய்து நிற்க,
.. விலைக்குநாம் தமிழை விற்றோம்!
பற்றிலை! அதனா லன்றோ
.. படர்ந்ததிப் பாசி எங்கும்?
தொடையமை செய்யுள் யாப்பைத்
.. தொல்தமிழ் தந்த போதும்
தடையது சிந்தைக் கென்றே
.. தள்ளிடும் நிலையை ஏற்றோம்!
மடையது வெள்ளங் காக்கும்
.. மகத்துவம் அறியாப் போக்கில்
உடைந்தது தமிழின் வாழ்வே!
.. உணர்ந்திடும் நாளெந் நாளோ?
வள்ளுவன் இளங்கோ கம்பன்
.. வடித்தநற் கன்னல் சாறு!
தெள்ளிய பாலில் தேனார்
.. திருப்புகழ்! அருட்பா என்றாய்க்
கள்ளொடு பூத்து நின்ற
.. கவிமலர் வனத்தில் இன்று
முள்ளுடை மரங்கள் ஆட்சி!
.. முடியுமக் காலம் என்றோ!
