skip to content

பொருதும் பூதங்கள்!

பொருதும் பூதங்கள்!

பூதம் ஐந்தும் பொருது முடித்திடச்
சேதம் எங்கும்! சிதைந்த துலகம்!
வானும் தீயும் ஒருபுறம் அமைய
ஏனைய மூன்றும் எதிராய்ப் போயின!
தன்னைக் குடித்துத் தழைக்கும் மரங்கள்
முன்னர்க் கண்டு முரண்டது நீரும்!
தாயாய் மண்ணைத் தழுவிய வேரைப்
பேயாய்ப் புரட்டிப் போட்டது காற்றும்!
மண்ணும் காற்றும் மழையென நீரும்
அண்டும் பொருள்களை ஆட்டி வைத்தன!
எங்கோ வானின் இடுப்பில் அமர்ந்து
பொங்கும் தீயும் புகைப்படம் எடுத்தது!
மிரட்டும் சோதரர் மூவரைக் கண்டே
அரண்டது வானும்! அடைத்தது விழியை!
இயல்பைத் துறந்த இயற்கையின் போக்கில்
துயிலின் மௌனம் தொலைந்து போனது!
கள்வெறி கொண்ட காற்றுத் தூரிகை
கொள்ளிடம் தோறும் குலைக்கும் ஓவியம்!
செந்நீர் எங்கும்! சேதங்கள் எங்கும்!
மண்ணில் காணா மடமை மிகுந்தது!
மழையின் போக்கில் மடிந்தன மரங்கள்!
குழைந்தது மண்ணும்! குவிந்தன பிணங்கள்!
காக்கும் படையே கலகம் செய்ததன்
தாக்கம் பூமியைத் தகர்த்து நின்றது!
கண்ணைத் திறந்துக் கனன்றது வானும்!
பொன்னாய்ப் பொலிந்தது புதிய சூரியன்!
வெப்பைக் கண்டு வியர்த்தன மூன்றும்!
தப்பிச் செய்த தவறுகள் தெரிந்தன!
மெல்ல ஆங்கே மௌனம் திரும்ப
தொல்லை யாவும் தொலைந்து போயின;
நொந்த மானுடம் நிம்மதி அடைய
ஐந்தும் இணைந்தன! அமைதி யாங்குமே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.