skip to content

ஆதவன் அந்தாதி

ஆதவன் அந்தாதி

சோதி போலெழும் தீச்சுடர்
மோதுங் காலிருள் மூப்புறும்!
சூதின் லீலைகள் தோற்றிட
ஆதி மூலவன் ஆள்கவே! (1)

ஆளும் மாயைகள் அற்றிட
நாளும் பாயொளி நல்கிடும்!
நீளும் தீயவை நீக்கிட
கோள மாயெழும் கூற்றமே! (2)

கூற்றம் போலிருள் கொன்றிடும்
ஆற்ற லாலதன் ஆளுமை
சாற்றும் ஞாலமும்! தாய்முறை
ஏற்ற தாலொளி ஈனுமே! (3)

ஈனும் பொன்னொளி ஈந்திஅத்
தான மென்பதன் தத்துவ
ஞான மொன்றினை நல்கிடும்
வான மண்டல மையமே! (4)

மைய ஊற்றென வான்மிசை
வையம் மாற்றிடும் வேலையைப்
பைய ஆற்றிடும் பானுவைத்
தையில் போற்றுவம் தாயதே! (5)

தாயின் அண்மையைச் சார்ந்திடும்
சேயின் துன்பெலாம் தீர்ந்திடும்!
தூய மண்மிசைச் சூதெலாம்
ஓய வெண்கதிர் ஓங்கவே! (6)

ஓங்கும் வானவன் ஊர்ந்திடத்
தூங்கும் மானுடர் சோர்வெலாம்
நீங்கும் காணது நீங்கிடின்
யாங்கும் மேனிலை ஆகுமே! (7)

ஆகும் யாதிலும் ஆதியாய்ப்
போகப் பாதைஈன் பூதியாய்த்
தேக சோதியின் சீருடை
ஏக மூதுவ ஏந்தலே! (8)

ஏந்தும் தீச்சுடர் யாங்கணும்
போந்த பூச்சரம் போல்விழ
நீந்தும் நீச்சலில் நீழலை
மாந்தும் மாச்சுடர் வாழ்கவே! (மாந்துதல் = உண்ணுதல்) (9)

வாழ்க சூரியன் வாழ்கவே!
ஆழ்க வீரிய அஞ்சனம்! (அஞ்சனம் = இருள்/அஞ்ஞானம்)
வீழ்க காரிருள்! விண்ணெலாம்
சூழ்க பேரொளிச் சோதியே! (10)

குறிப்பு: அடிகளுக்கிடையே ஒன்றாம் இரண்டாம் சீரில் எதுகையும், அடிதோறும் ஒன்றாம் மூன்றாம் சீர்களில் மோனையும் வருமாறு அமைக்கப்பட்ட வஞ்சி விருத்த அந்தாதி.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.