skip to content

மழலைப் பாடல்கள்

மழலைப் பாடல்கள்

1. தொலை பேசி

தொட்டால் சிணுங்கும் தொலைபேசி!
.. தூரம் குறைக்கும் தொலைபேசி!
எட்டாத் தொலைவில் இருப்போரும்
.. எங்கள் அறையில் உரைத்திடுவார்!

அல்லோ! அல்லோ! என்றிடுவார்!
.. அடுத்த வீட்டில் அதுகேட்கும்!
சொல்லே இன்றிச் சிலபேரோ
.. சொகுசாய் ஆங் ஊங் என்றிடுவார்!

டிரிங் டிரிங் என்றே ஒலிக்கிறது!
.. துள்ளி ஓடி நானெடுத்தேன்!
சரியாய்க் குரலே கேட்காமல்
.. சட்டென் றதனை வைத்துவிட்டேன்!

பாட்டி என்னை அழைத்திடுவார்!
.. பாட்டுப் பாடிக் காண்பிப்பார்!
போட்டிக் காகப் பழகுகிறேன்!
.. போய்நான் பரிசும் வாங்கிடுவேன்!

2. ஊஞ்சல்

முன்னும் பின்னும் ஆடுகின்றேன்
.. முழுநாள் ஊஞ்சலிலே!
அன்னை மடியில் அமர்ந்திருந்தேன்,
.. அதனால் பயமில்லை!

முன்னர் சுவரில் மாட்டியுள்ள
.. மூங்கில் பூக்கூடை
என்னை நேராய் இடித்திடுமோ?
.. இல்லை, திரும்பிடுமோ?

பாலின் கோப்பை தரையிலோடிப்
.. பரதம் ஆடியது!
காலை விட்டுச் செருப்புமங்கே
.. கரகம் தூக்கியது!

ஆடும் என்னை இழுத்தணைத்தே
.. அம்மா பாடுகிறார்!
ஓடும் தரையைப் பார்த்தெனக்கோ
.. உறக்கம் வருகிறதே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.