நான்செயுஞ் சபதம்!
தயங்குமோர் கணத்தில் கண்ணைத்
.. தவிர்த்திதழ் விரிக்கும் அப்பூ!
மயங்கிடா தென்றோ ஓர்நாள்
.. மலர்ந்திடும் தருணம் மொட்டில்
முயங்குமென் பார்வை கொண்டு
.. முகிழ்த்தலைக் கண்டே தீர்வேன்!
நயங்களை ரசிக்கும் போக்கில்
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
தூளென இருளை ஆக்கும்
.. சூக்குமம் அறிந்த வெய்யோன்
வாளென வருட வானில்
.. வளர்ந்திடும் வெய்யில் நாளை
மீளெழும் போழ்தில் மின்னும்
.. முதற்கதிர் கண்டே தீர்வேன்!
நாளெழும் நேரம் நெஞ்சுள்
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
கலமெனும் சிறையில் ஏங்கிக்
.. காண்பொருள் ஆகி எங்கும்
நிலவிடும் இரைச்ச லாலே
.. நிம்மதி தொலைத்த மீன்தன்
உலவிடும் பணியைத் தள்ளி
.. ஒருகணம் துயிலக் காண்பேன்!
நலமதை விரும்பும் போக்கில்
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
புல்லின மூங்கில் தன்வாய்ப்
.. புகுந்திடும் தென்றல் தன்னை
மெல்லவே மீட்டி மீட்டி
.. மேல்துளை வழியாய் ஏற்றித்
துல்லிய இசையாய் மாற்றும்
.. சூக்குமம் கண்டே தீர்வேன்!
நல்லிசை மூலம் காண
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
பல்வித மான வண்ணம்
.. படர்ந்தொரு சரமாய்ப் பூவின்
வில்லென வானில் நீள
.. ஓவியம் வரையும் அந்தத்
தொல்கலை அறிந்த மேலோன்
.. தூரிகை கண்டே தீர்வேன்!
நல்லதாய் வண்ணம் தீட்ட
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
சுற்றிலும் இயற்கை சொல்லும்
.. சூழ்நிலை அழகை யெல்லாம்
சொற்களில் தோய்த்துத் தோய்த்துச்
.. சுந்தரக் கவிதை யாக்கும்
விற்பனப் புலமை சேர்க்கும்
.. விந்தையைக் கண்டே தீர்வேன்!
நற்றமிழ்க் கவிதை பாட
.. நான்செயுஞ் சபதம் இஃதே!
