skip to content

தூங்கும் பனி

தூங்கும் பனி

உறவுகொண்ட கடலைமறந் துருவால் மாறி
.. உல்லாச வாழ்க்கையதை உதறித் தள்ளித்
துறவுகொண்டு நெடுநாளாய்த் துருவம் தன்னில்
.. துயில்பயிலும் பனிஅதன்றன் துயரம் என்ன?

அமுதெடுக்கக் கடல்கடைந்த அந்தப் போதில்
.. ஆழ்கடலின் நீர்த்துகள்கள் அலைந்த லைந்து
துமியெனவாய் எழுந்தநுரை தொலைவில் வீழ்ந்து
.. தொன்மையினால் பனியாகித் தொடரும் வாழ்வோ?

அதிமாசு அடைந்திடும்நீர்! அகிலம் வாழ
.. அமுதத்தை என்றென்றும் அளிக்க எண்ணி
எதிர்காலத் தேவைக்காய் இயல்பை மாற்றி
.. இயற்கையது சேமித்த இருப்பு போலும்!

நிலத்துக்குள் ஊடுறுவும் நீண்ட வேராய்
.. நீரதனைப் பெற்றுய்யும் நெடுமரத்தின்
மலர்கொத்தாய்ப் பனிக்கட்டி! மாசில் லாத
.. மகிழ்ச்சியெலாம் தொகுத்துரைக்கும் மண்ணின் நெஞ்சோ?

திரைகொண்ட நீர்நிலையில் சிரித்து வாழ்ந்து
.. தினந்தோறும் நெடுதூரம் திரிந்து பின்னர்
நரைகொண்ட நன்னீர்தன் நடைமறந்து
.. நாளாகப் பனியாகி நலிந்த தாமோ?
5
நதிவழியே நீர்மெல்ல நடக்கும் போதில்
.. நகர்ப்புறத்து நாகரிக நடப்பை யெல்லாம்
பதிவுரையாய்ப் பதப்படுத்திப் பார்த்துப் பார்த்துப்
.. பாதுகாக்கும் வரலாறே பனியாய்ப் போமோ?

சூரியனை இராட்டையெனச் சுழற்றி வைக்கும்
.. சூதில்லாக் காந்தியைப்போல் தோன்றும் பூமி
நீரெனுமோர் நூலதனை நூற்ப தற்காய்
.. நிலத்திடையே பனிப்பஞ்சு நிறைந்த தாமோ?

நிலமகளை அடைகின்ற நினைப்பில் பூமி
.. நிலவுகின்ற இரவதனை நிலைக்கச் செய்ய
உலவவரும் கதிரவனை ஓட்டும் போக்கில்
.. ஒளியதனை திருப்புகின்ற ஆடி யாமோ?

தானத்தின் பொருளுரைக்கத் தவத்தில் ஆழ்ந்து
.. தன்னுருவை மாற்றியுகம் தாண்டி இன்னும்
மோனத்தில் இருக்கின்ற முதுநீர் ஆமோ?
.. முறையிழந்த நிகழ்காலோ? மௌன நீரோ?

ஞாலத்தின் நெடும்பயண நகர்வின் ஊடே
.. நடைபழகும் எதிர்மறையாய் நன்னீர்த் தூக்கம்!
காலத்தைப் பொய்யாக்கிக் கடக்கும் ஞானம்!
.. கடந்ததையும் நிகழ்வாக்கும் கரையும் போதே!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.