skip to content

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!

ஆரமாய் அமைச்சர் ஆக
.. ஆளுமவ் வரசன் ஓடும்
நேரிரு கால்கள் ஆக
.. ஞானிகள் பரிதி ஆகப்
பாரமே ஆட்சி யாகிப்
.. பலருமேல் அமர்ந்தி ருக்கும்
தேரதே உலக மாயின்
.. தேயுமச்(சு) உழவர் அன்றோ!

துக்கமோ டின்பம் என்றே
.. சுற்றிடும் வாழ்க்கை தன்னில்
வக்கணை யாக நாளும்
.. வாய்த்திடும் உணவின் மேலாய்
மிக்கது வேறே தில்லை!
.. மிகைபிற! வெற்றுப் பேச்சே!
சக்கரம் உலக மாயின்
.. தாங்குமச்(சு) உழவர் அன்றோ!

மேவிடும் இயற்கை தன்னில்
.. மேன்மையாம்! வளமை எங்கும்!
தூவிடும் தூறல் தின்று
.. துளிர்த்திடும் பயிரின் காட்சி!
ஆவியை விட்டு ழைக்கும்
.. அவர்மனத் திடத்தி னாலே
ஓவியம் உலக மாயின்
.. உழவரே மாட்டும் ஆணி!

குணத்தினால் குறுகிக் குன்றி
.. குறைபல பெருகும் போக்கில்
பணத்தினைப் பெரிதாய் எண்ணிப்
.. பண்பினை இழந்த மாந்தர்க்(கு)
உணர்த்திடும் வகையில் ஓர்நாள்
.. உணவிலா(து) இறக்கச் செய்து
பிணமெனப் பெட்டிக் குள்ளே
.. பிணைத்திடும் உழவர் ஆணி!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.