skip to content

கொஞ்சிடும் நெஞ்சங்கள்

கொஞ்சிடும் நெஞ்சங்கள்

இல்லாத பொருளெண்ணி ஏங்கும் போக்கால்
.. இதயத்துள் வேர்பரப்பி எழும்பும் ஆவல்!
சொல்லாத பொருளெதையோ சொல்லிச் சொல்லிச்
.. சுகவலையில் சுயமிழக்கச் சொக்கும் பார்வை!
வெல்லாது வீழ்ந்திடினும் வெற்றி யென்றே
.. விளையாட்டாய் அதையேற்கும் விந்தை நெஞ்சம்!
கல்லாத நிலைதனிலும் கண்கள் தாமாய்க்
.. கற்கின்ற கலையிதுதான்! காதல்! காதல்! (1)

கண்கொத்தி மொழிப்பேச்சு! காதல் வீச்சில்
.. கண்ணிழந்தும் களிக்கின்றே கனவே மூச்சு!
மண்கொத்தி வளர்சேவல்! மதனின் ஏவல்!
.. மனங்கொத்திப் பார்த்துள்ளம் மகிழ ஆவல்!
புண்கொத்தி மருந்தூற்றல்! புலன்கள் தோற்றுப்
.. புதிராகிப் பிறக்கின்ற புதிதோர் ஆற்றல்!
எண்கொத்திக் கடிகாரம் எழுதும் நேரம்
.. ஏற்காது நீளுகின்ற இதயப் பேரம்! (2)

பேரத்தில் நெஞ்சீந்து நெஞ்சம் ஏற்கும்!
.. பேரிழப்பில் பெரும்லாபப் போகம் காணும்!
காரத்தில் கடுஞ்சுவையில் கசப்பில் கூட
.. கனிச்சுவையின் இனிப்பதையே காணும் நெஞ்சம்!
தீரத்தில் நதிஅலையின் சீற்றம் போலத்
.. தீராத பிரிவாற்றல் சிந்தை தங்கும்!
நீரொத்தப் போக்கிலன்பு நெஞ்சில் ஊறி
.. நிலைத்தெண்ணும் போதெல்லாம் நினைவாய்க் காட்டும்! (3)

இல்லாத போதெல்லாம் இரங்கும் உள்ளம்!
.. இருக்கின்ற நேரத்தில் எதையோ சாடும்!
பொல்லாத உறவிதுவே! பொய்யை மெய்யாய்ப்
.. புடமிட்டு நிதஞ்சேர்க்கும் பொய்யாய் ஊடல்!
நில்லாதிவ் விளையாட்டு நீளும் போதும்
.. நிலைக்கின்ற அன்பொன்றே நெஞ்சில் நிற்கும்!
செல்லாத பொருளின்றிச் சேதம் இன்றிச்
.. சிதைவில்லா வியாபாரம் செய்யும் காதல்! (4)

நெஞ்சள்ளி நெஞ்சுக்குள் நிறைக்கும் நெஞ்சம்
.. நெஞ்சத்தை நெஞ்சுக்குள் மறைக்கும் கொஞ்சம்!
நெஞ்சத்துள் மறைந்திருக்கும் நெஞ்சும் கொஞ்சம்
.. நெஞ்சடைத்தும் நெஞ்செடுத்துக் கொள்ளும்; மிஞ்சும்
நெஞ்சத்தின் உள்ளிருக்கும் நெஞ்சம் கொஞ்சும்!
.. நெஞ்சத்தின் கொஞ்சல்கள் மிஞ்சும்! விஞ்சும்
நெஞ்சத்தைக் கொஞ்சத்தான் கெஞ்சும் நெஞ்சம்!
.. நெஞ்சத்தின் மஞ்சத்தில் நெஞ்சம் தஞ்சம்! (5)

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.