skip to content

நினைவு நாரில் கனவுப் பூக்கள்: பாராட்டுரைகள்

கவிமாமணி இலந்தை சு இராமசாமி
கட்டிலே இல்லா ஒன்று
கவிதையாய்ச் சிறப்ப தில்லை!
கட்டிலே இருந்தால் மட்டும்
கவிதையாய் நிலைப்ப தில்லை!
ஒட்டியே நெஞ்சில் பூக்கும்
உணர்வுகள், பரிவு, காணும்
மட்டிலா அழகு ணர்ச்சி
வார்த்தையைக் கவிதை யாக்கும்!
அப்படி வார்த்தைகளை வாழவைத்துச் சுமையேற்றி சுவைகொள்ள வைத்திருக்கும் நல்ல மரபுக் கவிதைகளின் தொகுதியைக் கவிஞர் சந்தர் சுப்ரமணியன் நமக்கு வழங்கியிருக்கிறார்.
சமீப காலத்தில் வெளிவந்துள்ள மரபுக் கவிதைத் தொகுதிகளில் இது ஒரு சிறந்த இடத்தைப் பிடிக்கிறது. இரக்கமில்லாத இலக்கணப்புலவன் கவிஞனாகி விடுவதில்லை என்பது மகாகவி பாரதியின் கணிப்பு. இந்தத் தொகுதியின் முதல் இரண்டு கவிதைகளிலேயே கவிஞரின் பரிவுணர்ச்சி வெளிப்பட்டு விடுகிறது.
பூக்கட்டி விற்கும் ஒரு சிறுமியின் ஏக்கம் இத்தொகுதியின் முதல் கவிதையாகவும் இத்தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்து விடுகிறது. படிக்கவேண்டும் என்ற ஏக்கம் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளைப் பார்க்கும் போது அவளது நெஞ்சைப் பிசைகிறது. இங்கே கவிஞர் அந்தப் பெண்ணாகவே மாறி இந்தக் கவிதையை நடத்திச் செல்கிறார்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். கவிஞரின் பரிவு நம்மைச் சுற்றி நடமாடும் உயிரினங்கள் மட்டுமன்றி இலை, செடி, கொடி, மரம் ஏன் உயிரற்ற ஜடப் பொருள்களிடமும் பரவுகிறது.
சிலந்தி வலை கவிஞருக்குப் பல கற்பனைகளை அள்ளித் தருகிறது. இதோ ஒரு காட்சி
மார்கழி மாதக் கோலமிதோ? - இழை
மாற்றி மாற்றி நடக்கிறதே!
ஊர்வழிச் செல்லும் பூச்சியெலாம் - இதில்
உறையும் சந்துப் புள்ளிகளோ?
புத்தகம் என்னும் கவிதையை கடைசிச் சொல்வரை கூர்ந்து படிக்கவேண்டும். நல்ல புதிர்க் கவிதை.
கவிஞர் தான் கவிதையை எப்படிப் படைக்கிறார் என்பதை ஒரு கவிதையில் கூறுகிறார்:
சொல்கொடுத்த வண்ணமெலாம் தொடுத்தேன் - புதுத்
தோரணமாய்ச் சீரமைத்துக் கொடுத்தேன் - என்
கற்பனையிற் காணுகின்ற
காட்சியெலாம் நேரினில்கண்
டெடுத்தேன் - கவி படைத்தேன்
ஆம். இந்தத் தொகுதி முழுவதிலும் கவிஞரின் இந்தக் கூற்றை நிதர்சனமாகக் காணமுடிகிறது. கவிஞரின் பரந்து பட்ட பார்வையை நாம் இந்தத் தொகுதியில் காண்கிறோம். இயற்கையின் எழில் நடனம், தத்துவச் சிந்தனைகள், ஆன்மீக உந்துதல்கள், அறிவியல் சாளரங்கள், சமுதாய சீர்கேட்டைப் பற்றிய பரிவின் வெளிப்பாடு, சிந்துப்பாக்களைத் தொடுத்துக் கட்டியுள்ள மரபின் வித்தகங்கள் எனப் பலவிதமான நோக்கில் இக்கவிதைத்தொகுதி பரிமளிக்கிறது. இப்படிப் பட்ட தொகுதிகள் அதிகம் வெளிவருமாயின் நிச்சயம் மரபு வாழும்!

========

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள்

மரபுக் கவிதைகளே ஒரு விதத்தில் கவிதையின் போன்சாய் வடிவமோ என்று நினைக்க முடியும் என்றால், சந்தர் சுப்ரமணியன் போன்சாய் மரத்தின் புலம்பல் என்று ஒரு மரபுக் கவிதை பாடுகிறார். சில வரிகள் என்னைக் கவர்ந்து நிறுத்துகின்றன. உண்மையான கவிதை ஊக்கமும், நல்ல மரபுப் பயிற்சியும், யாப்பியல் ரீதியாகப் பல முயற்சிகளைச் செய்து பார்க்க வேண்டும் என்ற் ஆர்வமும் இவரை அடையாளப் படுத்துகின்றன. போன்சாய் மரம் ஒன்றைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரிதான் இருக்கும். ஏன் பாவம் வெட்ட வெளியில் விரிகிளை பரப்பி வானைத் துழாவ வேண்டிய ஒன்று, மேடையில் கைக்கடக்கமாக என்று....
சொல்லாய்ச் சுருங்கிய காவியம்நான் - நீர்த்
துளியாய் ஒடுங்கிய நீள்கடல்நான்;
புல்லாய்ப் பிறழிய வேய்ங்குழல்நான் - சிறு
போன்சாய் வடிவில் பெருமரம்நான்!
போன்சாயின் வேதனையை வேறு எப்படிச் சொல்ல முடியும்? பிறழிய - கொஞ்சம் படிக்கும் போது நெருடுகிறது. ஆயினும் வரிகள் உணர்ச்சியை ஏந்திக்கொண்டு போகின்றன.
பொய்யாய் உருவம் வளர்கிறது - எனைப்
போன்றே அதுவும் தெரிகிறது;
மெய்யாய் உணர்வே இருக்கிறது - வேர்
மேனி குறுகிக் கிடக்கிறது!
பாரதியின் சிந்தனைக் கொடையை, கவிதை வான்மழையைப் பாடுகிறர் சந்தர்:
வற்றிக் கிடந்த தமிழதிலே - அவன்
வழங்கிச் சென்றான் அமுதமழை
தொற்றித் தொடரும் தொடர்கதையாம் - அதன்
தோற்றம் கண்ட இவன்விதையாம்
கற்றும் கரையாப் பெருஞ்செல்வம் - அது
காற்றில் வளரும் தீவெள்ளம்
முற்றுப் பெறாத நாதகதி - அவன்
முடியாப் பொருள் ஆர் ஜீவநதி!
மழலைச் சிரிப்பில் கவிதையைப் பார்க்க முடிகிறது சந்தரால் -
சின்னச் சிரிப்பில் ஒருகவிதை - புதுச்
சித்தாய் மலரும் தருணமிது
கன்னம் குழியக் கவியமுது - நம்
கண்ணில் படிந்து வழிகிறது!
தொற்றிப் படரும் துளிர்சிரிப்பு - மனம்
தொட்டுச் சுகத்தைச் சுகிக்கிறது
காத்திருப்பதில் ஒரு சுகம், ஒரு வேதனை. ஆயினும் காக்க வைத்த காரணன் எத்தன் எனில் என்ன செய்ய?
கண்ணுள் சிறை பிடித்தாய்
காலம் கடந்ததென
என்னைப் பழித்திடுவான் - கிளியே
ஏய்ப்பதில் எத்தனடி!
இருட்டில் வெளிச்சம். வெளிச்சம்தான அது? ஏன் நம்பினால் அது நடத்திக் கொண்டு போகாதா? தாகம் தீர்க்க வேண்டாம். கானலிலாவது நீர்மை இருக்கிறதே என்று ஒரு நிம்மதி பிறவாதா?
காட்சி அறியாக் கருக்கல் பொழுதில்
காண வழி உண்டோ?
காட்டி மறைத்தார் முகத்தை எனத்தினம்
கரைதலும் வீணன்றோ? - தலைவி
கானலில் நீரன்றோ?
நதித்தடம். நீண்டு செல்லும் நதி. அதில் ஒரு நாணல். அது காட்டும் கட்சியின் குறியீடுதான் என்ன? நாணலுக்குப் பின் நாணி மறையும் அந்த உண்மையை முகத்திரை விலக்கிக் காணக் கவிதையால்தானே ஆகும்!
கல்லைப் புரட்டிக் கரையுடைத்துக்
காண்பொருள் யாவையும் கவிழ்த்தழித்து
நில்லாப் புனலாய் நெறிவிடுத்து
நீளும் நதியினில் நாணலொன்று!
அந்த நாணலைப் பார்த்தால் -
நீண்ட நதியெனும் அம்பெடுத்து
நிலமெனும் வில்லில் தொடுத்தெய்யத்
தீண்டிய கைவிரல் விட்டகன்றும்
தேடித் துடித்திடும் நாணிதுவோ?
இல்லை ஒரு வேளை...
ஆற்றின் தலைமேல் பதம்வைத்தே
ஆடிக்களிக்கும் சிவனிதுவோ?
சிலந்திக் கூட்டில் கட்டப்பட்ட கருத்து நம்முன் அசைந்து ஆடுகிறது -
உச்சிக் கிளையில் ஒட்டடையைக் - கால்
உலவிச் சிலந்தி வளர்க்கிறது
எச்சில் ஓவியம் எழுகிறது - இது
எல்லா உயிரையும் ஈர்க்கிறது!
ஒட்டடை என்பது சிலந்தியின் கண்ணில் இல்லை. இது மனித எடைக்கல் அளக்கும் சொல். கொஞ்சம் நெருடினாலும்
பள்ளம் இதுவோ பரவெளியில்? - பின்
பாயும் உயிரேன் தொலைகிறதோ?
என்ற வரியில் மனிதர்களின் தத்துவம் ‘பரவெளி’ உருவத்தில் பாவம் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு விட்டதைக் கண்டும் அநுதாபம் கொள்ளாதிருக்க முடியுமோ?
கொட்டுகின்ற தேன்தமிழில் நனைந்தேன்! - எழுது
கோலெடுத்துப் பாவெழுத நினைந்தேன்! - தேன்
சொட்டெடுத்துக் கோலடைத்துச்
சொல்லனைத்தும் தாளிறக்க
முனைந்தேன்! - சுவை உணர்ந்தேன்!
என்று சந்தர் பாடும் பொழுது அவருடைய கவிதை வரிகள் அவரைப் பொய்ப்பதில்லை. ஏனென்றால்
முள்ளொன்றில் முகிழ்க்கின்ற எண்ணம் - அதன்
மொழியாகி மலர்கொள்ளும்
முன்னூறு வண்ணம்!
கள்ளுண்ண வண்டொன்று முன்னும் - அது
களிக்கின்ற நேரத்தில்
கவிதையது திண்ணம்!
மூங்கிலில் ஏழ்துளை கண்டு - அதில்
மௌனத்தைத் தாலாட்டி
மொழியாக்கும் வண்டு!
ஆங்கெழும் சந்தமதைக் கொண்டு - தமிழ்
அழகூட்டிக் கவிதைநான்
அடைவதும் உண்டு!
எழும் சந்தத்தைக் கொண்டு தமிழ் அழகு ஊட்டி அடையப்படுவது கவிதையா? அல்லது ஆங்கே ஊறிநிற்கும் அழகை ஊன்றி நிற்கும் மொழியின் மூச்சு கவிதையா? என்ற கேள்வியை வரிகள் எழுப்பத்தான் செய்கின்றன.
ஏனென்றால் 'மந்திரம் போல் அவள் வாய் ஒலிக்க, அதை வாங்கும் மடலோ என் மௌனம்? சுந்தரக் கண்ணிமை மேல் எழும்பும் புதுச் சுருக்கம் சுகத்தின் வரி வடிவோ?’
என்று கேட்க வைப்பது மகள் மட்டுமன்று. முகிழ்க்கும் கவிதையும்தானே?
காற்றில் கவிதை எழுதுகிறாள் - என்
கைகள் பிடித்ததைக் காட்டுகிறாள்

புல்லின் நுனியில் தவமிருக்கும் - அந்த
புதுப்பனி போல் அவள் பேரழகோ?
என்ற வரிகள் சந்தரின் வழக்கமான முகவரியாக இருக்க வேண்டும் என்று விழைகிறது உள்ளம்.
(நினைவு நாரில் கனவுப் பூக்கள் - என்னும் கவிதை நூலை வாசித்ததில்)

==================

மரபுக்குப் புது வரவு
பாச்சுடர் வளவ. துரையன்

[சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து]
எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக் கவிதைகள் எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியன. அதனால்தான் பாரதியும் அவர் தாசனும் இன்னும் வாழ்கிறார்கள். இன்றும் பல இதழ்கள் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன. மரபுக் கவிதைக்கென்றே சில இதழ்களும் வெளிவருகின்றன. ஒருமுறை மேலாண்மை பொன்னுச்சாமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது “ஏன் நீங்களெல்லாம் மரபுக் கவிதை எழுதுவதை விட்டு விட்டீர்கள்” என்று கேட்டார்.
”மரபுக் கவிதைகளை நன்கு படித்து உள் வாங்கியவர்களால்தான் நவீன கவிதைகளைச் சிறப்பாக எழுத முடியும்” என்கிறார் விக்ரமாதித்யன் நம்பி. “ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சியை ஊட்டுவது மரபுக் கவிதைகள்தாம்” என்கிறார் பொன்னீலன் அண்ணாச்சி.
இவை எல்லாம் சந்தர் சுப்ரமணியனின் ’நினைவு நாரில் கனவுப் பூக்கள்’ மரபுக் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது எழுந்த எண்ணங்களாகும். நூலில் உள்ள 28 கவிதைகளும், கருத்தமைவோடு, யாப்பமைதியுடன், ஓசைநயத்தோடு விளங்குகின்றன. கவிஞனின் பாடுபொருள் என்பது திட்டமிட்டு உருவக்கப்படுவது அன்று. இதைத்தான் பாடவேண்டுமென்று இயந்திரத்தனமாய் எழுதப்படும் கவிதைகள் கால வெள்ளத்தில் நிற்க மாட்டா. பல காட்சிகள், பொருள்களைக் கவிஞன் கண்டாலும் சில மட்டுமே அவன் மனத்தில் படிந்து கவிதைகளாகின்றன.
மாறிவரும் நவீன உலகில் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்க போன்சாய் மரங்கள் வைப்பதைப் பர்க்கிறோம். அவற்றைப் பார்க்கும்போது, கட்டிப் போடப்பட்டிருக்கும் சிறு குழந்தையும், இறக்கைகள் வெட்டப்பட்டு ஜோசியம் பார்க்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் கிளியும்தாம் நினைவுக்கு வருகின்றன. கவிஞர் இவர் கேட்கிறார்.
புதுமை படைக்கும் துணிவிருப்பின் – உம்
புறத்தார் கரத்தை உடைத்தெடுங்கள்;
நிதம்உம் நகங்கள் பிரித்தெடுங்கள் – அதில்
நிம்மதி பெற்று நெகிழ்ந்திருங்கள்
“போன்சாய் மரங்களைப் புதுமை என்றுதானே சொல்கின்றீர்; புதுமை வேண்டும் வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களின் கைகளை வெட்டிக் கொள்ளட்டும்; தினம் தோறும் தம் நகங்களை விரல்களிலிருந்து பிரித்தெடுக்கட்டும்” என்று சந்தர் சுப்ரமணியன் சற்றுக் கோபமாகவே எழுதுகிறார் மேலும் காட்டில் அமர்ந்து தவம் செய்யும் முனிவரைக் கொண்டுவந்து வீட்டுக் கூடத்தில் உட்கார வைப்பதை போன்சாய்க்கு உவமையாக்குகிறார். ’தோப்பைத் துறந்த குறுமுனி’ என்பது சிறப்பான உவமை.
’நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே’ எனத் தொடங்கும் பாடலில் பாவேந்தர் பாரதிதாசன் நிலவுக்கு உவமைகளாக “ பூத்த தனிப் பூவோ? சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ? ஒளிப் பிழம்போ? “ என்று அடுக்கிப் பாடுவார். அதுபோல நாணலைச் சொல்ல வந்த இந்தக் கவிஞர் பல உவமைகள் கூறுகிறார். சில நயம் மிக்கவை.
”ஆறு செல்லும் திசை நோக்கி பாதம் பதித்து நடக்கும் வழிகாட்டி அது. நிலம் எனும் வில்லில் நதி எனும் அம்பைச் செலுத்தக் கட்டப்பட்டிருக்கும் நாண் அது. ஆற்றின் பரப்பை உடைக்க முயலும் வாள்முனை அது. நதியின் தூண்டில் அது. தன்னை மறந்தோடும் நதியை தலையை அடிக்கும் பிரம்பு அது.”
என்பதெல்லாம் புதிது புதிதாய் இயல்பாய் உள்ளன. ஆனால் அவர் காட்டும் ‘திரௌபதியின் கூந்தல்’ சிவனின் நர்த்தனம் என்பன செயற்கைதாம்.
தொழிலாளர் பற்றிப் பாடும் போது, அவர்களின் குடல் நாள்களைத் தின்று நகர்கிறது’ என்றும் ’தோள்களில் எப்போதும் வியர்வைக் கடல்’ என்றும் எழுதியிருப்பது யதார்த்தமானது. பாலியல் தொழிலாளர் பற்றிக் கூறும்போது ‘அவர்களை விட்டிலாக்கி அவை விளக்கு வெளிச்சத்தின் உடல் கண்டு விழுகின்றன’ என்பதால் விளக்கான ஆடவர்க்கும் அதில் பங்கு உண்டென்கிறார். பிறகு அவர்களையே விளக்காக்கி வருபவரை விட்டில்களாக்குகிறார். ஒரே கவிதையில் இவ்வாறு உவமைகளை மாற்றுவதும் புதுமைதான். ஆனால் குழப்பம் ஏதுமின்றி தெளிவாக இதைச் செய்வதில் கவிஞர் வெற்றி பெறுகிறார்.
’என் கவிதை’ கவிதைக்கணங்கள்’ ’விட்டில்களுக்கு விலையான விளக்கு’ ஆகிய கவிதைகள் சிறப்பான சிந்துக் கவிதைகள் ஆகும். ‘ஜீவநதி’ நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்தது. [எடுத்துக் காட்டு: பாரதியின் வெள்ளிக் கமலத்திலே பாட்டு]’ நீளும் நதியில் நாணலொன்று’ ’சிறு துளிகள்’ என்பன சிந்து வகையில் சேரா; அவை அறு சீர் விருத்தங்கள்.
தாரிணி பதிப்பகம் நல்ல தாளில் சிறப்பான அச்சில் நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. பொருளடக்கம் போட்டிருக்கலாம்; சில கவிதைகளை எதுகை நன்கு வெளிப்படுமாறு இரண்டாம், நான்காம் அடிகளை சற்ரு உள்ளிழுத்து அச்சடித்திருக்கலாம். ’நிர்வாணம்’ கவிதையில் இறுதி அடி மட்டும் அடுத்த பக்கம் 15-க்குப் போனதைத் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் கவிதைகள் எழுதத் துடிப்போரும், நல்ல கவிதைகள் நாட விரும்புவோரும், அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு இது என்று துணிந்து கூறலாம்.

===================

வையவன்
[இலக்கணம் மீறிய கவிதைகள் , புதுக்கவிதைகள், வசன கவிதைகள் , ஹைக்கூ எனப் பலவகைச் சோதனைச்சூறாவ ளியில் மரபுக்கவிதையின் சந்தச்சுவையும் சொல்லடுக்கின் எழிலும் மறைந்தே போய்விட்ட இழப்பு அநேகமாகப் பலரால் உணரப்பட்டாலும் , கடைவிரித்தோம், கொள்வாரில்லை என்று சோர்ந்து போகாமல் இழப்பு முக்கியமில்லை ; மீண்டும் உயிர்த்தெழுதல் முக்கியம் என்று உணர்ந்து சந்தர் சுப்பிரமணியன் நினைவு நாரில் தம் கனவு மலர்களைத் தொகுத்துத் தந்த அரிய் முயற்சி தான் . பாராட்டப்படவேண்டிய முயற்சி என்று பல்லின் மீது நாவு படாமல் கூறிவிட்டு அகன்றுவிடுதல் எல்லோருக்கும் எளியது.ஆனால் சிலர் அதன் செவ்வி தலைப்படுவர். உதாரணம். சந்தர் சுப்பிரமணியன்.தமிழன்னை கணக்கெடுத்துக்கொண்டே தான் இருக்கிறாள் .யார் உண்மையில் தமிழுக்குப் பாடுபடுவோர் என!

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.