skip to content

அகத்தின் அகவல்: பாராட்டுரைகள்

புலவர். இரா. இராமமூர்த்தி.

'யாதும் ஊரே யாவருங் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் தம் கருத்துக்களைச் செம்மையாக உலகத்தார்க்கு அறிவிக்கும் வகையில் இயற்றப்பெற்ற அகவற்பா ஆகும். மகாகவி பாரதியார் காலம் வரை, மரபுப் பாக்கள் கோலோச்சி விளங்கின! கருத்துக்கு முதன்மை தர வேண்டும் என்பதற்காகப் பாடல்களின் வடிவம் சற்றே நெகிழ்ந்து புதுக்கவிதைகள் வலம் வரத் தொடங்கின. இன்று 'கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப்பாட்டாச்சே' என்ற புதுமைப்பித்தன் கருத்திற்கேற்ப எங்கும் எதிலும் புதுக்கவிதை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இன்றும் மரபின் வழியில் கவிதைகள் இயற்றப்பட்டால், அவை படிப்போருக்குப் பரவசம் ஏற்படுத்தும். கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் ஆசிரியப் பாவாகிய அகவற் பாக்களாக அமைந்து தமிழ்மக்களின் ரசனைக்குவிருந்தாயின. 'கவிஞன் யானோர் காலக் கணிதம்!' என்ற பாடல் ஆழ்ந்த பொருள் நயத்துடன் அறிஞர் பலரின் பாராட்டுதல்களைப் பெற்று விளங்குகிறது.
அவ்வழியில் செறிந்த பொருள் நயத்துடன் சிறந்த கருத்துக்களைப் புலப்படுத்தும் பாடல்களை அகவற்பாவில் கவிமாமணி சந்தர் சுப்பிரமணியன் இயற்றி வழங்கியுள்ளார். 'அகத்தின் அகவல்' என்ற நூலின் பெயர், அவர் அகமயிலின் அகவலோசையை ஒலிக்கிறது!
அகவற்பா எழுதுவதில் தனிசுகம் உள்ளது. எண்ண வோட்டத்தை அப்படியே வாங்கி வழங்கும் அமுதசுரபி ஆசிரியப்பா! இதோ, கவிஞரைப் பற்றிய என் கருத்தை உடனே வழங்கும் அகவலைப் பாருங்கள்.
சந்தர் சுப்பிர மணியாம் நண்பர்
செந்தமிழ் விரகர்! திறம்நிறை கவிஞர்!
இலக்கிய வேலெனும் இதழ்முத் தத்தால்
கலக்கிடும் காதலர்! கனவுகள் வடிக்கும்
சொல்லுளிச் சிற்பி! சுந்தரப் பாடலால்
வெல்லும் 'அகத்தின் அகவலை'த் தான்தன்
அகமயில் அகவலாய்ச் அசைவளர் நடனமாய்
சுகந்தரு மனைவிமுன் தோற்கும் வெற்றியாய்ப்
படிக்கும் செவிகளில் படம்பல வடித்துத்
துடிக்கும் கணினியைத் தொட்டுத் தடவித்
தந்தார் அவரணி வளரச்
செந்தமிழ் வாழ்த்தைச் செப்புகின் றேனே!
இவர் கவிதைகள் நாற்பதுள் எதனைச் சொல்வது? எதனை விடுவது? இவற்றை விளக்கி, இன்னும் ஒரு நூறு பக்கங்கள் எழுதினாலும் முழுமை பெறாது!
தூக்கத்தை பற்றிய, 'கனவுச்சுரங்கம்' என்ற தலைப்பே நம்மை எழுப்பி உட்கார வைத்துவிடுகிறது.
"இமைவலை பிடிக்கும் இருள்மீன் விருந்து!''
"ஒவ்வோர் இரவும் உடன் நம் இணைஇமை
கவ்விய படிவாழ் காதல் - துயிலே!
எனமுடிக்கும் கவிஞர் வியப்பை உண்டாக்குகிறார்! உணவை 'மாயக் கலைஞன்' என்று பாடுவதும், 'மௌனச்சிறை' என்ற பாடலில் இந்திய விடுதலை படும்பாட்டை ஒருசில வருடம் ஓடிய பின்னர் விரல்கறை காட்டி விளித்தனர் என்னை! என்கிறார், என்ன எள்ளல்!
சேர்ந்து தீயோர் செய்யும் வினையால்
சோர்ந்து கிடக்கும் சுதந்திரம் - நானே!
அடுத்து, 'தலை எழுத்து' என்ற ஊதுபத்தி பற்றிய பாடல். இதில் "முள்ளின் முனையில் முகிழ்க்கும் புகைப்பூ!" "தீமேல் அரவம் செய்யும் நடனம்" என்ற அடிகளில் வத்தியின் வாசனை மெல்ல எழுகிறது.
முன்பு கவிமாமணி அப்துல் காதர் பாடிய பாட்டு நினைவில் வாசம் சேர்க்கிறது.
ஊதுபத்தி சொல்கிறது..
என் நெற்றியில் திருநீறும் அதனடியில்
சிவப்பு குங்குமமும் இருப்பதால்
நான் ஹிந்து!
நானே சிலுவை! என் உச்சிக்குக் கீழே
இரத்தக்கறையுடன் புழுதி படிந்த புகைவடிவில்
இயேசுநாதர்!
மசூதியில் வரிசையைப் பணிந்து தொழும் என்
தலையில் சிவப்புத் தொங்கலுடன்
வெள்ளைத் தொப்பி!
இந்தப் பாடலின் சமத்துவம் சந்தர் சுப்பிரமணியத்தின் மற்ற பாடல்களில் விரவிக் கிடக்கின்றன! 'பயனின்றி வாழ்பவன் மாண்டாலும் பயனில்லை' என்ற கருத்து 'விழல்' என்ற பாடலில் என்னைப் புதைத்த மண் மேலும் விழலே முளைத்தது! என்கிறார்.
''ஒரு கவிதை'' எழுத முனையும் இவர் 'பண்ணில் எழுந்த பாவளர் வாணீ எண்ணியது முடிக்க எனக்கருள் வாயே" என்று சொல்லும் போதே, 'தந்தேன் வரம்!' என்று வாணி ஆசி வழங்கி விட்டாள்! கோயில் திருப்பணி தொடங்கும் போதெல்லாம் மகிழும் நந்தி நாளாவட்டத்தில் பிசுக்கும் அழுக்கும் ஏறி, நிற்கிறது இதனை,
'காலவை இரண்டும் கல்லாய்ப் பிணைய
காலமே எண்ணிக் காத்துக் கிடந்தேன்!' என்கிறார்.
கொடுமைகளை ஏற்றுக்கொண்ட பெண்மை தான்பெற்ற காயங்களைக் கவிதை ஆக்குகிறாள்! 'பெண்ணைப் பெற்றேன் பெருந்தவறு என்றவன் என்னைச் சுவரில் இடித்த கறை இது!' என்ற வரிகள் நம்மை உலுக்குகின்றன!
'கண்' பற்றிப் பாடுகிறார், இருட்டொளி எனுமிவை இரண்டுக் கிடையே திரையென மூடித் திறப்பது கண்ணே!
'சிலந்தியுடன் சிநேகம்' கொண்ட இவர் பாடுகிறார்;
''அவ்வளவு எச்சம்! அதைநீ சுரந்ததால்
எவ்வளவு தாகம் இருக்கும் உனக்கு? பாடலாகிய எச்சில் வலைக்கு நாமே இரை யாகிறோம்!
அவர் படிக்கும் புத்தகத்தில் சிலந்தி வலை! அதனை
'ஏன்வலை விரித்தாய் என் நூல் ஓரம்?
நானதைப் படிக்கும் நாட்களை எண்ணவா?'
நம் நாட்டின் தேர்தல் திருவிழா பற்றி கவிக்கோ எழுதினார்
தேர்தல் சுயம்வர மண்டபத்தில் போலி நளன்கள்!
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி!
இந்தப் பாடலின் தாக்கம் நம் சந்தரின் பாடலில் மேலும் விரிகிறது! 'எண்களைக் கூட்டி எமதும தெனுமிவர் முன் பொது சனமோ முழுதாய்ப் பூச்சியம்! மெத்தனமாக முத்திரை குத்தும் இத்தனை திருதராஷ்டிரர் ஏனோ?'
'நிழல்' - தேயும் பொருளிது செருப்பின் செருப்பே! ஆஹா, அற்புதம்!
முல்லைச் சரம் - ஆடும் கயிற்றில் ஆயிரம் நாரை'
ஓரிழை நாரினை உண்ணும் பற்கள்!'
அடுத்து 'நீர்வாள்' எனும் ஆறு;
'ஒற்றை நரம்புடை ஓயா வீணை!'
'மயிலிறகு' என்ற பாடல் இவர் பெற்ற பெண்குழந்தை பற்றிச் சொல்கிறது.
நடக்கும் நிலவு! நளினக் கண்கள்!
ஒப்பிடற் கரிய உளறல் வாய்மொழி!
இந்த வரிகள் மகாகவி பாரதியின் ''ஆடி வரும் தேனே!' என்ற தொடரை நினைவூட்டுகின்றன.
'சூனியப் பயணம்' அறிவியல் பற்றியது! 'ஆலயம் நுழைய அனுமதி மறுத்துக் சாலைகள் காணும் சனி கிரகத்துக்கு!
''அகத்தின் அகவல்'' என்ற அகவற்பாக்கள் நாற்பதைக் கொண்ட இந்நூல் படித்துப் படித்து மீண்டும் படித்துப் படித்துச் சுவைக்கத் தக்க கவிதைப் படையல் ஆகும். கவிமாமணி சந்தர் சுப்பிரமணியன் நம் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்!

===================

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள்

ஒரு கணமேனும் உளத்தினை உலுக்கும்
கருதனைப் படைக்கும் கவிமனம் வேண்டும்
என்பது பேரவா சந்தருக்கு அவர்தம் அகத்தின் அகவலில்.
வெற்றுத்தாளில் விதவித மாய்நான்
சொற்றொடர் குவித்துச் சோர்ந்து கிடந்தேன்
சிந்தை கசக்கிச் சேர்த்தன யாவும்
என்பதுவரை மிக நளினமாகச் செல்லும் வரிகள்
மந்தைச் சொற்சேர் மலட்டு வரிகள்
என்று விழுகின்றன.
நொடிநிறை அலைகள் நுரைத்துத் ததும்பும்
வடியாக் கால வளர்கடற் பரப்பில்
என்று காலக்கடலில் ஒரு பயணியைச் சுட்டுகிறார்.
கல்விக் கழகு காண்பதில் மயக்கும்
சொல்லை அடுத்துத் தொடரும் தெளிவே
என்ற வரிகள் சந்தரின் பார்வை தெளிவானது என்பதைக் காட்டுகிறது.
நான் மிகவும் ரசித்த வரிகள் இவை - அருமை
நீர்த்துப் போகும் நிகழ்வை நினைவாய்
ஆற்றுப் படுத்தும் அற்புதப் பாணன்!
முப்பரி மாணம் முழுதையும் அசைத்துச்
செப்படி வித்தை செய்திடும் காலன்
கணங்கள் முகிழ்க்கும் காலக் கொடி - என்ன அருமையான சொல்லாட்சி!
மணல்வெளியை இப்படியும் நினைக்கலாம் கொல்!
மண்மகள் நுதலில் மணல்வரி யாவும்
எண்ணச் சுருங்கும் எழில்புரு வங்கள்!
மழை இழிந்து மாமலை விரிந்து மண்ணுறும் அருவியாய்க் குவிந்து நீள்நிலம் நடவா நீளும் நதியாய்ப் பயின்று நற்கடல் சேரும் ஒரு வாழ்க்கை வரலாற்றை, சிறு பிள்ளைத் தமிழ்க் கீற்றில் கொடுக்க முடிகிறது சந்தரால்.!
ஒற்றை நரம்புடை ஓயா வீணை
கற்களின் மேளம்! கானப் பெருக்கு!
காலக் கசடாய்க் காணும் மணலில்
கோலம் செய்நதி! கோட்டுக் கவிதை!
ஊற்றுக் குழவி! ஓடைச் சிறுமி!
சேற்றுப் பெருக்காய்ச் செவ்விளங் கன்னி!
ஆழி தழுவும் அரிவை அகண்டு
பேரிளம் பெண்ணாய்ப் பிறவி முடிக்குமே!
முடிக்குமே என்று உட்கார்ந்து விடுகிறது கவிதை, தூக்கித் தந்து அந்த ஏந்து உணர்வில் தான் அந்தர்தானம் ஆக வேண்டிய கவிதை. சந்தர்! என்ன அவசரம் தமிழோடு என்று ஓர் அலுப்பு வரத்தான் செய்கிறது.
வெண்பா ஒரு சவால் என்பார்கள். ஆனால் கவிதைக்கு அகவல் ஒரு சவால் என்பதும் ஓர் நுட்பமாம் அறிக. மொழிதலைக் கவிதையாய் மயங்கவும் வாய்ப்பு தரும் வடிவம் அகவல் என்பதை உணர்ந்துதான் இருப்பார் சந்தர், அவர் அந்த மயக்கத்தை மீறும் இடங்களில்.

Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.