skip to content

பாச்சரம் - 1

பாச்சரம்-1
(வேறுபட்ட படைப்புகளின் தொகுப்பு)

  1. கூடுங்காண் நின்கனவும் கொள்வாய்நின் வேண்டுதலை
    ஆடுங்காண் நெஞ்சுனிறை யானந்தம் - ஆடுமயில்
    கானகத்தே யாடிக் கருந்தோகை தான்விரிக்க
    வானம் பொழியும் மழை (31-07-2009)
  2. பசுமையாய் என்னெஞ்சிற் பாவுமுன் னெண்ணம்
    வசியமா யென்னை யுருக்கும் - கசியுமென்
    நெஞ்சின் சுமையிறக்கி நீளும் துயில்தன்னில்
    கொஞ்சுங்காண் நின்றன் கனவு (29-07-2009)
  3. எட்டா விடமாம் இசையுலகி லோர்சிகரம்
    தொட்டார்காண் ஓர்பெண்ணாய்ப் பல்லவி பட்டம்மாள்
    மும்மூர்த்தி மாதருண் மூத்தோர் உயிர்நீத்தும்
    இம்மையை நீட்டும் இசை (17-07-2009)
  4. என்றுமெழும் சந்திரனில் நால்பத்து ஆண்டுமுன்னர்
    இன்றன்றோ கால்வைத்தான் ஓர்மனிதன் - வென்றதனால்
    அவ்வேளை சூள்கொண்டான் ஓர்நாளில் விண்கலத்தால்
    செவ்வாய்க்கும் காண்பான் வழி (21-07-2009)
  5. அலையாய் அவள்வந்துச் சென்றாளென் நெஞ்சே
    அலையாய் நினைந்தவளை நீயும் - உலர்ந்த
    இலையென ஓர்நாள் உதிர்ந்தேயேன் வாழ்வில்
    இலையென வானாள் அவள்
  6. காதலென்றேக் கண்ணடித்தான் கைப்பிடித்தான் ஓர்நாள்நான்
    தேதிபார்க்க நம்மணத்துக் கென்றபோது - சாதிகாட்டி
    மெய்யெனச் சொன்னவன்தான் மெல்லவெந்தன் கையகற்றிப்
    பொய்யெனப் போய்விட்டான் பார்
  7. அனுதினமும் ஆற்றில் சினமோடு தோன்றி
    தினந்தேடும் செங்கதி ரோனே - மனதாளும்
    வெண்ணிலவோ வாருங்காண் காரிருளில் நீயறிய
    உண்மை யுரைத்தேன்காண் இன்று
  8. வாழுமுள்ளம் உன்னையென்றும் வாழ்த்தும்; நினையெண்ண
    வீழுமே என்வினையு மோர் நொடியில் - வேழமுகா
    என்னைத் தினங்காக்கும் நாயகனே இப்புவியில்
    நின்னை வணங்காதோர் யார்
  9. சங்கரனை பணிந்திருப்போம்
    படைப்பமைப்பு: தரவு கொச்சகக் கலிப்பா (காய் காய் காய் காய்)

    பாடல்:
    அங்கரியில் விடமேற்றுச் சங்கரியை யிடமேற்று
    பங்கயனின் தலையிருத்தி மங்கையினைத் தலையிருத்தி
    செங்கண்மால் மதனழித்துச் செங்கண்ணால் மதனழித்த
    சங்கரனை அணிந்திருக்கும் சங்கரனைப் பணிந்திருப்போம்

    சொல் பிரித்து:
    அங்கு அரியில் விடம் ஏற்றுச் சங்கரியை இடம் ஏற்று
    பங்கயனின் தலை இருத்தி மங்கையினைத் தலை இருத்தி
    செங்கண்மால் மதன் அழித்துச் செங்கண்ணால் மதன் அழித்த
    சங்கு அரனை அணிந்திருக்கும் சங்கரனைப் பணிந்திருப்போம்

    சொல் பொருள்:
    அரி - கடல்; பங்கயன் - பிரமன்; இருத்தி - அறுத்து / பொருத்தி;
    செங்கணான் - திருமால்; மதன் - செருக்கு; சங்கு - கழுத்து

  10. உன் மௌனம்
    என் காதைக் கிழிக்கிறது -
    பேசு, என் காது குளிரட்டும்!
  11. ஊறியூறிக் கல்தேய்த்து ஊரோடி ஊண்சேர்க்குஞ்
    சோராச் செயற்திறன்கொள் செவ்வெரும்பே - ஏறும்
    வழித்தேடிச் சோம்பாது நாமுணங்கி ஓயா
    துழைப்போமின் ஊரெலாம் ஊண்
  12. வெளிச்சம்,
    இது ஒரு
    தொடர் மாரத்தான் ஓட்டம்.

    ஒளிக்கீற்றை
    மின் கம்பங்களுக்கு
    கொடுத்தபடி
    தன் முறை முடிக்கும்
    சூரியன்.

  13. காக்காக்கும் மாகவி கொக்கொக்க கோவாய்க்கே
    போய்க்காக்கின் நாகாய்க்க காய்கவிக்கு - காக்காவோர்
    நாகாக்க நீர்க்கா தரக்கவிக்கோ நீர்கைக்க
    மேபார்க் கழிகரையும் கா

    பொருள்:
    காக்காக்கும் = சரசுவதி காக்கும்
    மாகவி கொக்கொக்க = மகா கவி கொக்கு போன்று
    கோவாய்க்கே போக்காக்கின் = அரசனின் வாயிலில் நின்று காத்திருக்கும் போது
    நாகாய்க்க காய்கவிக்கு = கவியின் நா வரண்டு தாகத்தால், மற்றவர்களை வைத கவிக்கு
    காக்காவோர் = காவல் காப்போர்
    நாகாக்க = கவியின் நாவினை காக்க (தாகத்தை அடக்க)
    நீர்க்கா = இள நீர்க்காயை
    அக்கவிக்கோ நீர்கைக்க = அந்த கவிக்கு அந்த நீர் கசக்க
    மேபார்க் கழிகரையும் கா = மேற்ப்பார்க்கையில் கழிந்து கரையும் காக்கை
  14. அம்மம்மா எம்மாமா அம்மாமி சேர்ந்துமைமல்
    கைம்மா இழுமா ரதமேறி - இம்மையில்
    சும்மை சுமக்கயாம் மாகொளப் பெற்றேனே
    மைம்மையின் மாமைக் கரம்

    சொற்களின் பொருள்:
    அம்மம்மா = பாட்டி
    எம்மாமா = என்னுடைய மாமா
    அம்மாமி = மாமன் மனைவி
    மைமல் = மாலைநேரம்
    கைம்மா = யானை
    இம்மை = இப்பிறப்பு
    சும்மை = சுமை
    மா = செல்வம்
    மைம்மை = மலடி
    மாமை = கருமை

    பாடலின் பொருள்:
    எனது பாட்டி, மாமா மற்றும் மாமியுடன் மாலை நேரத்தில் யானை இழுக்கும் ரதத்தில் ஏறி சென்று, இந்த பிறப்பில் சுமையாக, பணம் கொடுத்து ஒரு மலடியின் கருப்பு கரத்தை பற்றி மணம் செய்து கொண்டேன்.
  15. நாம்கடவுள் என்றே சிலர் நடிப்பர் நகைப்புடன்
    ஓமென்று வாய்திறந்து பூக்கொடுப்பர் - ஆமெனில்
    தொட்டுழச் செய்தவர் தீர்ப்பர் பிணியாவும்
    கெட்டோம் இதை நம்பி நாமும்
  16. வருமென்றே வாய்திறந்து வாழ்ந்திடின் வாளாய்
    தரும் நம் உலகமெனல் தவறு - உறைப்பின்
    செயச்சிறக்கும் நம்செய லாக்கம தொன்றே
    உயர்த்திடும் நம்மை உணர்
  17. எல்லாப் புகழும் இறைக்கென்றே சொன்னாய்நீ
    சொல்லாப் புகழடைந்தும் செறுக்கற்று - உள்ளோர்
    அகங்குளிற அருசுவை அள்ளித்தந் திசையின்
    சுகங்காட்டி சுடரகு மானே
  18. கர்பம் தரித்து கடந்துலகில் வீழ்ந்தோடி
    சொற்பமாய் யாவும் சுகித்துப்பின் - அற்பனாகி
    வாழ்ந்து அலையா தவந்திருத் தாள்தேடி
    வீழ்ந்தவன் நாமம் ஓது
  19. என்னிடமிகை யேதுமிலா திருந்தும் எடுத்தெனை
    முன்னிடம் நிறுத்தி மகிழ்ந்தாய் - பண்ணுடன்
    கவிதையினும் மேலாய் பகிர்ந்தன்பு உணர்த்திடப்
    புவியதனில் பொருளிலை காண்
  20. கனவினில் காரிருளில் கருத்தவிடி காலையிலும்
    தினம்வரும் தினகரனின் தீயினிலும் - அனல்தணிந்த
    மாலைவெயில் போதினிலும் மருகுமி ரவினிலுமென்
    வேலை தமிழ்ப் படைப்பு
  21. கண்டோம் கருத்தினையாம் கவின்மிகு நின்கவியில்
    கொண்டோம் பயன்பலநின் கவிக்கொடையாலே - பண்டோர்
    படைத்திட்ட காவியப் பாச்சுவை மாறாதின்றும்
    கிடைக்க நின்பாவே வழி
  22. மனமுண்டோ தொடரலையாய் மற்றுமோர் கவிகோர்க்கின்
    தினம்மெல்ல தித்திக்கும் தீந்தமிழ்தான் - சுனைவழி
    ஊற்றெடுக்கும் தூய்நீர்போல் நம்நாவில் இக்குழுமம்
    சேர்க்கும் தமிழ்ச்சுவை இனிது
  23. ஆனந்தவா சிகளொரு புறம்மறுபுறம் ஏழ்மையென
    ஏனிந்த ஏற்றத் தாழ்வு - வானின்று
    பெய்மழை கடல்பாலை எனக்கருதா போன்றிங்கே
    செய்கஒரு சமச்சீர் விதி
  24. அதற்காய் அடிவைத்தாய் அருகிலெனை அழைத்தாய்
    இதமாய்சொல் கொண்டெனை ஏமாற்றி - பதம்பார்க்க
    பழகிய நின்காதல் பலருக்கும் சொல்வேன்யான்
    அழகிய அடிமட்டப் பொய்
  25. காணாமலு னையான்காலவீ தியில்தேடியும் நெஞ்சு
    கூனாமல் தான் உள்ளேன் குறையின்றி - ஆனாலும்
    தாளாத சோகத்தில் உழல்கின்றேன் நின்பூந்தளிர்
    தோளோடு சேரும்நாள் நினைந்து
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.