தமிழ்ப்பழம்
சந்தம்: தன்னா .. தனதான
-
சொன்னால் சுவையோடி
...செந்நா வினிலாடி
பன்னாள் பழமாகி
...பின்னே தமிழாக,
பொன்னாய் நினைநாடி
...பண்,பா யெனவோதி
முன்னாள் கவிபாடு
...முன்பே அமுதோநீ? -
விண்ணோர் தமிழோடு
...வந்தே உறவாட
மண்ணோர் நகரோடி
...மன்னா ஐயமாற
உண்டோ மணமோது
...என்றே விளையாட
கண்ணா லழலாயும்
...வென்றா யிலையோநீ? -
கண்டா னரிதான
...இன்சேர் கனிதானே
உண்டா லதையேயுய்
...கொண்டார் பலகால
மென்றோ அதையேதா
...னெந்தாய் வயிறார
தந்தா னதனாலே
...தங்கா யமுதேநீ -
முன்னே கடவூரில்
...மன்னா சரபோதி(ஜி)
தொண்டா ரிடமேகி
...எந்நா ளெனயேவ
வந்தா ளபிராமி
...வந்தே யிருளோட
செந்நா வழியோடி
...தந்தா னபிராமி -
வந்தே குறைகூறி
...வந்தோர் செவிசீவ,
வந்தாய் கிரிநாதா
...தந்தா யொருபாட
மன்றோ அதனாலே
...அன்றே விலியூரார்
தந்தா ரொருபாட
...லங்கே வளராயோ -
நன்றே நலமாக
...நம்மோ ரினிவாழ
வெண்பா வகையோடு
...கொண்டே சிறுபாட
லன்றோ வெழுசீரால்
...தந்தா னதுபாட
மன்றோ குறளாக
...நின்றே யதையோது -
பெண்ணா லொருவீர
...னின்றா னிலைதோய
மன்னா திருராம
...னன்றோ வினைசாய
வென்றா னவனாலே
...பொன்னா யொருபூமி
கண்டே யொருகாதை
...கம்பா கவியாறே -
கொன்றா னறியாது
...வன்கோ பிழையோடே
பெண்ணே பரலாலே
...வென்றா ளொருநீதி
தந்தா ளொருசாப
...முந்தீ நகரேக
சொன்னாய் முனியேசி
...லம்பா யழகோடே -
உண்ணோ ருளமேகு
...மன்னா நளபோசன்
விண்ணோ ரிடையேதான்
...மன்றோ டுளபோது
கண்ணே யிமையாது
...கண்டே தமைசூட
வெண்பா சில நூறாய்
...வென்றாய் நளகாதை
(மன்று - மன்றம்; தமை - தமயந்தி) -
செந்நா நிதமோதிச்
...செந்தா ளடிசேர்நீ
சொன்னா ரமுதூறப்
...பண்ணால் புகழாக
அண்ணா மலைவாழு
...மண்ணா கிரியாரின்
பண்ணே இசையாகி
...மின்னா யமுதேநீ
